உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி : அமெரிக்க துணை ஜனாதிபதி தனிமைப்படுத்திக் கொண்டார்
உலக அளவில் அமெரிக்காவில்தான் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையிலும் கொரோனா ஊடுருவி விட்டது.
ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ராணுவ உதவியாளருக்கு கடந்த புதன்கிழமை கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, டிரம்ப், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் வெள்ளை மாளிகை ஊழியர்கள் தினந்தோறும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே, துணை ஜனாதிபதி மைக் பென்சின் பத்திரிகை தொடர்பு செயலாளர் கேட்டி மில்லருக்கு கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனால், மைக் பென்ஸ், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இன்று அவர் வெள்ளை மாளிகைக்கு செல்வார் என்று தெரிகிறது.
பென்ஸ் தினந்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். அதில் அவருக்கு தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும், வெள்ளை மாளிகை மருத்துவ குழுவின் ஆலோசனைகளை அவர் பின்பற்றுவார் என்று செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
மைக் பென்ஸ், கடந்த வெள்ளிக்கிழமை விமானத்தில் செல்ல தயாரானபோது, அவருடன் பயணிக்க இருந்த 6 அதிகாரிகள் கடைசி நேரத்தில் கீழே இறக்கி விடப்பட்டனர். அவர்கள் கேட்டி மில்லருடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.
அதுபோல், கொரோனா வைரஸ் தடுப்புக்காக அமைக்கப்பட்ட வெள்ளை மாளிகை சிறப்பு குழுவில் இடம் பெற்றுள்ள மூத்த விஞ்ஞானிகள் அந்தோணி பவுசி, ராபர்ட் ரெட்பீல்ட், ஸ்டீபன் ஹன் ஆகியோரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இவர்களும் கேட்டி மில்லருடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.
கேட்டி மில்லர், ஜனாதிபதி டிரம்பின் மூத்த ஆலோசகர் ஸ்டீபன் மில்லரின் மனைவி ஆவார். ஸ்டீபன் மில்லர் இன்னும் வெள்ளை மாளிகைக்கு வந்து செல்கிறாரா? அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதா? என்பது பற்றி வெள்ளை மாளிகை தரப்பில் எதுவும் கூறப்படவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply