நிரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கில் விசாரணை தொடங்கியது
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி(வயது 49). பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தார். இது தொடர்பாக அமலாக்கத்துறை, சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியது. அதனை தொடர்ந்து, நிரவ் மோடி லண்டனுக்கு தப்பியோடினார்.
இந்தியா விடுத்த வேண்டுகோளின்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட்டில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி சாமூவேல் கூஸ், இந்த வழக்கின் மீதான 5 நாள் இறுதி விசாரணை மே 11-ந்தேதி தொடங்கும் என கூறி வழக்கை ஒத்திவைத்தார். அதன்படி நிரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கின் முதல் நாள் விசாரணை நீதிபதி சாமூவேல் கூஸ் முன்னிலையில் நேற்று தொடங்கியது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிரவ் மோடி கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக சிறையில் இருந்தபடி, காணொலி காட்சி வாயிலாக விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.
கோர்ட்டு அறையை சிறையுடன் காணொலி காட்சி வாயிலாக இணைப்பதில் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டதால் விசாரணை தொடங்க தாமதமானது. விசாரணை தொடங்கியதும் இந்தியா தரப்பில் ஆஜரான வக்கீல்கள் நிரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்களை சமர்பித்து வாதிட்டனர். இந்த வழக்கின் 2-வது நாள் விசாரணை இன்று (செவ்வாய்கிழமை) காணொலி காட்சி வாயிலாக நடத்தப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply