தான் பதவியேற்றதும் முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடப்படும் – ஜோ பைடன் சூளுரை

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அந்த நாடு தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.

அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 55 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. பலி எண்ணிக்கை 3 லட்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவி வரும் அதே வேகத்தில் தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 95 சதவீதம் பயனளிக்கக்கூடியது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவின் மார்டனா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள நபர்களிடம் 100 சதவீதம் செயல்திறன் கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த 2 தடுப்பூசிகளும் மனிதர்களிடம் இறுதிகட்ட பரிசோதனை முடித்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.

இன்னும் ஓரிரு நாட்களில் இந்த தடுப்பூசிகளை அவசர தேவைக்கு பயன்படுத்துவதற்கான ஒப்புதல் கிடைத்துவிடும் என்றும், அடுத்த வாரம் முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் எனவும் தொற்றுநோயியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தான் பதவியேற்றதும் முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என சூளுரைத்துள்ளார்.

டெலாவேர் மாகாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது முதல் 100 நாட்களில் கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியாது. அதற்கு நான் உறுதியும் அளிக்க முடியாது. ஆனால் வைரஸ் பாதிப்பை மிகப்பெரிய அளவில் குறைப்பதற்கான முயற்சிகளை நாங்கள் செய்வோம். அதன்படி எனது முதல் 100 நாட்களில் குறைந்தது 10 கோடி அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடப்படும்” என்றார்.

மேலும் தனது பதவியின் முதல் 100 நாட்களின் முடிவில் பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்க விரும்புவதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply