சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் : கோவில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
2020-ம் ஆண்டு முடிவடைந்து 2021-ம் ஆண்டு பிறந்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பீதியுடனேயே கடந்து முடிந்துள்ளது. இந்தநிலையில் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் எந்தவித ஆரவாரமும் இன்றி ஆங்கில புத்தாண்டு நள்ளிரவில் பிறந்து இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு பிறக்கும்போது, சென்னை மாநகரமே திக்குமுக்காடும் அளவுக்கு தெருக்களில் மக்கள் நடமாட்டம் இருக்கும். பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஆரவாரம் செய்வார்கள்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் சென்னை மாநகரம் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் நள்ளிரவில் தூங்கி நன்றாக ஓய்வெடுத்த பொதுமக்கள், இன்று அதிகாலையிலேயே கோவில்களில் திரண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
சென்னையில் அனைத்து கோவில்களிலும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. வடபழனி முருகன் கோவிலில் இன்று அதிகாலை முதலே சாமி தரிசனத்துக்கு மக்கள் திரண்டனர்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முககவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். சானிடைசர்களும் வழங்கப்பட்டன.
புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.
வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் வழியாக மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
புரசைவாக்கத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலிலும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.
பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு சமூக இடைவெளியை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
பாரிமுனை தம்புசெட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 6 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். இரவு 9 மணி வரை கோவில்நடையை திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக இருந்தால் இரவு 10 மணி வரையிலும் சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக காளிகாம்பாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சர்வேஸ்வரன் கூறும்போது, ‘‘சக்திவாய்ந்த தெய்வமான காளிகாம்பாளை வழிபட்டால் தொழில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக இன்று வழக்கத்தை விட காளிகாம்பாளை தரிசிக்க கூட்டம் அதிகமாக இருந்தது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். போலீசாரும் முழு ஒத்துழைப்பு அளித்து பாதுகாப்பு அளித்தனர்’’ என்றார்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் பக்தர்கள் அலைமோதினர். அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பெண்களும், குழந்தைகளும் சாமி தரிசனம் செய்தனர்.
இதற்காக கோவில் சார்பிலும், போலீஸ் சார்பிலும் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், குன்றத்தூர் முருகன்கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
இரவு 10 மணிவரையில் சாமி தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. வடிவுடையம்மன், தியாகராஜ சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தது. சாமி தரிசனம் முடித்துவிட்டு யாரும் கோவிலுக்குள் அமர முடியாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
புத்தாண்டையொட்டி வடிவடையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அனுமதிக்கப்பட்டனர்.
செங்குன்றத்தை அடுத்துள்ள சிறுவாபுரி முருகன் கோவிலிலும் இன்று சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சென்னையை ஒட்டியுள்ள கோவில்களில் கிராமத்து மணம் வீசும் கோவில்களில் இந்த கோவில் முதன்மையானதாக விளங்குகிறது. சுற்றிலும் வயல்வெளிகளுடன் எழில் சூழ்ந்த வகையில் இந்த முருகன் கோவில் அமைந்திருப்பது சிறப்பாகும். இங்கும் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
சென்னை புழல் அருகே உள்ள விளாங்காடுப்பாக்கத்தில், 1,700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது.
இங்கு இன்று அதிகாலை 4.30 மணிக்கே நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருவள்ளூர் புட்லூர் அம்மன் கோவிலிலும் இன்று புத்தாண்டையொட்டி சிறப்பு தரிசனம் நடைபெற்றது. பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பெரியபாளையம், பெரிய பாளையத்து அம்மன் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வணங்கினார்கள்.
எப்போதுமே தமிழ் புத்தாண்டு தினத்தில்தான் கோவில்களில் மக்கள் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்படும். ஆங்கில புத்தாண்டு தினத்தன்று சாமி தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கை தமிழ் புத்தாண்டு தினத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் இந்த முறை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் கோவில்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வழிபட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply