5,000 ரூபா கொடுப்பனவு:1,500 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

குறைந்த வருமானம் பெரும் 30 இலட்சம் குடும்பங்களுக்கு தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டுக்காக ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் இன்று பூர்த்தியாகவுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக அரசாங்கம் ஆயிரத்து 500 கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்திருந்தது.

கொரோனா வைரசு தொற்றுக்கு மத்தியில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக இந்த கொடுப்பனவு வழங்க வேண்டும் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமூர்த்தி பயன் பெறும் குடும்பங்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், முதியோருக்கான கொடுப்பனவு பெறும் குடும்பங்கள், அங்கவீனமாவர்களுக்கான கொடுப்பனவு பெறும் குடும்பங்கள், சிறுநீரக நோய்க்காக கொடுப்பனவு பெறும் குடும்பங்கள் உள்ளிட்ட ஏழு பிரிவினருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

இதேவேளை, ரமழான் நோன்பு நோற்கும் குறைந்த வருமானம் பெறும் முஸ்லிம் குடும்பங்களுக்கும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாக ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இவர்கள் இந்த கொடுப்பனவைப் பெற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதியொன்று நிர்ணயிக்கப்படவில்லை. அத்துடன், புத்தாண்டு காலத்தில் பயணங்களை மேற் கொண்டிருப்பவர்களும், திரும்பி வந்ததன் பின்னர் அவர்களது பிரதேச சமூர்த்தி அதிகாரியைத் தொடர்பு கொண்டு இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply