நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது : 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை

சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஏப்.17) அதிகாலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து மாலை 4 மணியளவில் விருகம்பாக்கத்தில் இருந்து, மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின்மயானத்திற்கு அவரது உடல், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க, அவரது கலை, சமூகச் சேவையை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன், அவரது உடலை அரசு தகனம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.

அதன்படி நடிகர் விவேக்கின் உடலுக்கு, 78 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை சார்பில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து விவேக்கின் உடலுக்கு அவரது மகள் இறுதிச் சடங்குகளை செய்தார். பின்னர் நடிகர் விவேக்கின் உடல், மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply