கமலா ஹாரிசுடன் பிரதமர் மோடி பேசியது என்ன?: வெளியுறவுத்துறை செயலாளர் விளக்கம்

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு நேரில் வருமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் வாஷிங்டன் போய்ச் சேர்ந்த அவருக்கு அமெரிக்க வாழ் இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதையடுத்து அவர் அந்த நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அந்த நாட்டின் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தமிழகத்தை பூர்விகமாகவும் கொண்டுள்ள கமலா ஹாரிசை மோடி சந்தித்து பேசினார். இருவரும் நேரில் சந்தித்துப் பேசியது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. இந்தியா, அமெரிக்கா உறவுகளை வலுப்படுத்த துணை நிற்கும் பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினார்கள். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட மோடி, “அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரது சாதனையால் ஒட்டுமொத்த உலகமும் உத்வேகம் பெற்றது. பகிர்ந்த மதிப்புகள் மற்றும் கலாசார தொடர்புகளை அடிப்படையாகக் கொண்ட இந்திய, அமெரிக்க நட்புறவை மேலும் வலுப்படுத்துகிற பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம்” என கூறி உள்ளார்.

மோடியும், கமலா ஹாரிசும் பத்திரிகையாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது மோடி கூறியதாவது:-

இந்தியாவும், அமெரிக்காவும் மிக நீண்ட, பழமையான ஜனநாயக நாடுகள். இரு நாடுகளும் ஒரே மாதிரியான விழுமியங்களை பகிர்ந்து கொள்கின்றன. இதனால் இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இந்த பூமி கிரகம், மிகக்கடினமான சவால்களை (கொரோனா வைரஸ் பெருந்தொற்று உள்பட)எதிர்கொண்ட தருணத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடனும், துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிசும் பதவி ஏற்றனர். மிகக்குறைந்த காலத்தில் நீங்கள் (கமலா ஹாரிஸ்) கொரோனா வைரஸ் பெருந்தொற்று, பருவநிலை மாற்றம், குவாட் என பல வெற்றிகளைப் பெற்றிருக்கிறீர்கள்.

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான துடிப்பான, வலிமையான மக்கள் தொடர்புகள் நம் இரு நாடுகளுக்கும் பாலமாக உள்ளது. அவர்களது பங்களிப்புகள் பாராட்டுக்குரியவை.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின்போது இந்தியாவுக்கு நீங்கள் (அமெரிக்கா) கனிவான வார்த்தைகளுடன், உதவிக்கரம் நீட்டினீர்கள். அதற்காக இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் அமெரிக்காவின் துணை ஜனாதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஒரு முக்கியமான, வரலாற்று நிகழ்வு ஆகும். உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு நீங்கள் உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள். ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் உங்கள் தலைமையில் நமது இரு தரப்பு உறவு புதிய உயரங்களைத் தொடும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

நீங்கள் இந்தியாவுக்கு வருகை தர வேண்டும். உங்கள் வெற்றிப்பயணத்தைத் தொடரும் வேளையில், அது இந்தியாவிலும் தொடர வேண்டும் என்று இந்தியர்கள் விரும்புகிறார்கள். எனவே அவர்கள் உங்களை வரவேற்க காத்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு வருகை தர உங்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கமலா ஹாரிஸ் கூறியதாவது:-

இந்தியா நிச்சயமாக எங்களது மிக முக்கியமான கூட்டாளி நாடு ஆகும். நமது உலகம் பாதுகாப்பானதாக, வலிமையானதாக திகழ்வதற்கு நம் நாடுகள் இணைந்து பணியாற்றி இருக்கின்றன. ஒன்றாக கரம் கோர்த்து நின்றுள்ளன.

பிரதமர் அவர்களே, நீங்களும், நானும் கடந்த முறை ஒன்றாக பேசியபோது, நம் உலகம் எப்போதையும் விட ஒன்றோடு ஒன்று சேர்ந்திருப்பதைப் பற்றியும், இன்று நாம் சந்திக்கும் சவால்கள் குறித்தும், கோவிட்-19, பருவநிலை மாற்றம், மற்றும் சுதந்திரமான திறந்த இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் பகிரப்பட்ட நம்பிக்கையின் முக்கியத்துவம் பற்றி பேசினோம்.

இந்தியா மீண்டும் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றைப் பொறுத்தமட்டில், நமது நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட்டுள்ளன. தொற்றின் ஆரம்ப கட்டத்தில், இந்தியா பிற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியின் முக்கிய ஆதாரமாக திகழ்ந்தது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தபோது, இந்தியாவின் தேவை மற்றும் தடுப்பூசி போடும் பொறுப்பை ஆதரித்ததில் அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது.

உலகளவில் ஜனநாயகங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றன. அந்தந்த நாடுகளிலும், உலகமெங்கும் உள்ள ஜனநாயக கொள்கைகளையும், நிறுவனங்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகும். ஜனநாயகத்துக்கான இந்திய மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் செய்ய வேண்டிய பணிகள் பற்றி நான் தனிப்பட்ட முறையிலும், எனது குடும்பத்தின் மூலமும் அறிந்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இரு தலைவர்களும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பாக பால்கனியில் உலா வந்து உதவியாளர்கள் இன்றி சாதாரண முறையில் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.

கமலா ஹாரிசுடன் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியபோது, எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றியும், அதன் காரணமாக இந்தியா அனுபவித்து வரும் பாதிப்புகள் குறித்தும் விளக்கினார். அதை கமலா ஹாரிசும் ஒப்புக்கொண்டார்.

அப்போது அவர் “பாகிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பின் மீது இந்த குழுக்களால் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இந்த குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இந்த தகவலை வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா வெளியிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply