வவுனியா தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது;வாக்காளர்களைத் தம் பக்கம் இழுப்பதற்கு அரசியல் கட்சிகள் முனைப்பு
வவுனியா நகரசபைக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வவுனியாவில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக கட்சிகளின் வேட்பாளர்களும் முக்கியஸ்தர்களும் தெரிவித்துள்ளனர். இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அரச அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள் என்பவற்றிலும் இவர்கள் படியேறி இறங்குவதைக் காணக்கூடியதாக இருக்கி்ன்றது. நகர்வலம், சைக்கிள் ஊர்வலம் என்பவற்றை நடத்தி மக்களின் கவனத்தை ஈபிடிபி கட்சியினர் ஈர்த்து வருகின்றனர். ஏனைய கட்சிகள் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி பிரசாரங்களை முடுக்கிவிட்டு வாக்கு வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இ ஐக்கிய தேசிய கட்சி என்பன வியாழனன்று வவுனியா நகரில் வர்த்தக நிலையங்கள்இ வங்கிகள் அரச அலுவலகங்கள் என்பவற்றிற்குச் சென்று வாக்கு வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்காக வாக்கு கேட்பதற்காக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கட்சியின் முக்கிய உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய டாக்டர் ஜயலத் ஜயவர்தன ஆகியோர் வடமத்திய மாகாணசபை உறுப்பினர்கள் சிலருடன் வவுனியாவுக்கு வருகை தந்திருந்தார்கள்.
வாக்குவேட்டையின் போது ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன ஆகியோர் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனைச் சந்தித்து அளவளாவியதுடன், தமது ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் அவரிடம் கையளித்தார்கள்.
இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தி்ல் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வவுனியாவுக்கு வருகை தந்திருந்தார்கள்.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்குடன் கிழக்கு மாகாண மக்கள் இணைந்திருப்பதையே விரும்புகின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையிலேயே தமது இந்த விஜயம் அமைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தாவும் தேர்தல் பிரசாரத்திற்காக வவுனியாவுக்கு வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் அரசாங்க கட்சியாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தாவும் வவுனியாவுக்கு வருகை தந்து அங்கு தங்கியிருந்து பலதரப்பட்டவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றார். அரசாங்க கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஈரோஸ், சிறீரெலோ ஆகிய கட்சியினரும் வீடுவீடாகச் சென்று வாக்கு கேட்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றார்கள்.
வவுனியா நகரசபைக்கு உட்பட்ட, முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் பட்டாணிச்சூர்புளியங்குளம் பகுதியில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மும்முரமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அரச அலுவலகங்கள், அரச திணைக்களங்கள் என்பவற்றிலும் இவர்கள் தமது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்கள். வவுனியா நகரசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 24 ஆயிரம் வாக்காளர்கள் தகுதி பெற்றிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply