பாகிஸ்தானுக்கு ரூ.22 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கும் சவுதி அரேபியா

பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சர்வதேச நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடியில் அந்த நாடு உள்ளது.

இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க கடன் வழங்கி உதவும்படி தனது நெருங்கிய நட்பு நாடான சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது.

இதனை ஏற்று கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு 3 ஆண்டுகளுக்கு 6.2 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46 ஆயிரத்து 504 கோடி) கடன் வழங்க சவுதி அரேபியா முன்வந்தது.

இதில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.22 ஆயிரத்து 501 கோடி) ரொக்க உதவியாகவும், 3.2 பில்லியன் அமெரிக்க டாலர் ( சுமார் ரூ.24 ஆயிரம் கோடி) மதிப்புள்ள வருடாந்திர எண்ணெய் மற்றும் எரிவாயுவாகவும் வழங்க ஒப்புக்கொண்டது. இந்தக் கடனுக்கு பாகிஸ்தான் 3.2 சதவீதம் வட்டி செலுத்தி வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான்-சவுதி அரேபியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக சவுதி அரேபியா அரசு, தான் பாகிஸ்தானுக்கு ரொக்கமாக கொடுத்த 3 பில்லியன் டாலர் கடனை திருப்பி கேட்டது.

அதன்படி, 1 பில்லியன் டாலர் கடனை கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் சவுதிக்கு திருப்பி கொடுத்தது. எனினும் மீதமுள்ள 2 பில்லியன் டாலர் கடனை செலுத்த பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது.

அதுமட்டுமன்றி பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த கச்சா எண்ணெயையும் சவுதி அரேபியா நிறுத்தியது. இது பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமைந்தது.

இந்த சூழலில் ஏற்கனவே கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த பாகிஸ்தானின் பொருளாதாரம் கொரோனா தொற்றுக்கு பிறகு அதளபாதாளத்துக்கு சென்றுள்ளது.

இதனால் இருநாடுகளுக்கு இடையிலான பழைய பிரச்சினையை மறந்து பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கும்படி சவுதி அரேபியாவிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.22 ஆயிரத்து 501 கோடி) நிதியுதவி அளிக்க உள்ளதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

இந்த நிதியானது உடனடியாக பாகிஸ்தான் மத்திய வங்கியில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கூடுதலாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பெட்ரோலிய வணிகத்துக்கு கடனுதவி அளிக்கப்படும் எனவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிப்பதற்காக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பிரதமர் இம்ரான்கான் நன்றி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply