கலவரம் எதிரொலி சாலமன் தீவுகளுக்கு ராணுவத்தை அனுப்பும் நியூசிலாந்து
தென்பசிபிக் பெருங்கடலில் நூற்றுக்கணக்கான தீவுகளைக் கொண்ட நாடு சாலமன் தீவுகள். இந்நாட்டின் பிரதமர் மானசே சோகவரே, சமீபத்தில் தைவானுடனான தூதரக உறவை துண்டித்துவிட்டு சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தினார். சீனாவிடம் நெருக்கம் காட்டுவதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து பொதுமக்கள் கடந்த வாரம் போராட்டத்தில் குதித்தனர்.
தலைநகர் ஹோனியாராவில் உள்ள பாராளுமன்றம் முன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. அப்போது போராட்டக்காரர்கள் பாராளுமன்ற கட்டிடத்துக்கும், அதனருகே உள்ள ஒரு போலீஸ் நிலையத்துக்கும் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கலவரம் நடந்த பகுதியில் இருந்து உடல் கருகிய நிலையில் 3 சடலங்களை போலீசார் மீட்டனர். கலவரம் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சர்வதேச நாடுகளின் உதவியை சாலமன் தீவு அரசு கோரியது. அதனை ஏற்ற நியூசிலாந்து அரசு ராணுவம் மற்றும் போலீஸ் படையைச் சேர்ந்த 65 வீரர்களை சாலமன் தீவுகளின் பாதுகாப்பிற்கான அனுப்பி வைக்க உள்ளது. தலைநகர் ஹோனியாராவில் வெடித்த கலவரம் மற்றும் அமைதியின்மையால் ஆழ்ந்த கவலை அடைந்ததாகவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கு உதவ விரும்புவதாகவும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறினார்.
இதேபோன்று ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா மற்றும் பிஜி ஆகிய நாடுகளும் தங்கள் ராணுவத்தை அனுப்புகின்றன.
சாலமன் தீவுகளின் பிரதமர் மீது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் மேத்தேயு அடுத்த வாரம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ள நிலையில் வெளிநாட்டு படைகள் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply