எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தவர்களை மோதிய தனியார் பேருந்து

மட்டக்களப்பு – கொழும்பு வீதியின் ஊறணி பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் எரிபொருளுக்காக வீதி ஓரத்தில் வரிசையில் காத்திருந்தவர்கள் மீது தனியார் பேருந்து ஒன்று மோதியதில் 5 பேர் படுகாயமடைந்ததுடன் 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ள சம்பவம் இன்று (27) அதிகாலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதி ஓரத்தில் மக்கள் மோட்டர் சைக்கிள்களுடன் வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 5.00 மணியளவில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றுகின்றவர்களை செங்கலடி பிரதேசத்தில் இருந்து ஏற்றிக் கொண்டு ஆரையம்பதியை நோக்கி பிரயாணித்த தனியார் பேருந்து ஒன்று வீதி ஓரத்தில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்கள் மீது மோதியுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த 5 பேர் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவத்தில் 5 மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதுடன் மோதிய பேருந்தை பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதுடன் ஓட்டுனரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply