இஸ்ரேல்- ஹமாஸ் போர் இரு தரப்பு மீதும் குற்றச்சாட்டு வைக்கும் ஐ.நா சொல்வது என்ன?

கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது ஹமாஸ் படை. பலர் கொல்லப்பட்டு ஏராளமானோர் பணயக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட நிலையில் அதற்கு எதிராக இஸ்ரேல், காசா மீது கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக வான்வழி தாக்குதலை தொடுத்திருக்கிறது.

ஆயிரக் கணக்கிலான மனித உயிர்களைக் காவு வாங்கிவரும் இந்த போர், உலக நாடுகளையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளன. ஹமாஸ் படைக்கு சில நாடுகள் இஸ்ரேல் நாட்டுக்கு சில நாடுகள் என ஆதரவு வழங்கப்பட்டு போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூடியது. அப்போது பேசிய ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், காசாவில் ஐநா முகாம்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன மக்களின் மீதான 56 ஆண்டுகால அடக்குமுறைகளே தற்போது போராக வெடித்துள்ளதாக கூறிய அவர், தெற்கு காசா நோக்கிச் செல்ல பொதுமக்களுக்கு அறிவுறுத்திவிட்டு, இடம்பெயரும் சமயத்தில் அவர்கள் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதே நேரம், ஹமாஸின் தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது எனவும் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தங்கள் கடமைகளை இருநாடுகளும் மதிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply