ஜனாதிபதியின் வழிகாட்டலில் தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டம்

நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் 07ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டலில் சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் ஆரம்பமாகவுள்ள இத்திட்டத்தில், முப்படையினர் மற்றும் பொலிஸார் களத்தில் இறங்கவுள்ளனர். அதிகரித்து வரும் டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில், இத்திட்டம் ஆரம்பமாகிறது.

எதிர்வரும் 07ஆம் திகதி முதல் அதிக டெங்கு பரவல் பிரதேசங்களை கேந்திரமாகக் கொண்டு முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில், இந்த வேலைத்திட்டம் உள்ளடக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இத்திட்டம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவ நிபுணர் பாலித மஹிபால மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஆகியோரின் தலைமையில் அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இப்பேச்சுவார்த்தையில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இராணுவ பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி மேஜர் ஜெனரல் பீ.பீ.ஏ.பெரேரா, கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி கெப்டன் டீ.ஏ.எதிரிவீர, கெப்டன் சி.எல்.ஜேலிஆரச்சி, டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் சுகத் சமரவீர, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் நிமல்கா பத்திலஹெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக நேற்றைய தினம் மாவட்ட ரீதியாக டெங்கு ஒழிப்பு மாவட்டக் குழுக்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அத்துடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றாடலை பரிசோதிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த விசேட வேலைத்திட்டம் நாடளாவிய அனைத்து சுகாதார மருத்துவ அதிகாரிகள் அலுவலகங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளது. சுற்றாடல் பரிசோதனை நடவடிக்கைகளில் பொலிஸார் முப்படையினர், சிவில் பாதுகாப்பு செயலணி, டெங்கு ஒழிப்பு பிரிவு உத்தியோகத்தர்கள், கிராமிய குழுக்கள், கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து முன்னெடுக்கவுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply