இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றம் குறித்து சீன முகவரகத்தின் பிரதித்தலைவரிடம் விளக்கமளித்த திறைசேரி செயலாளர்

சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவரகத்தின் பிரதித்தலைவருடனான சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்த திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, கடன்மறுசீரமைப்பு செயன்முறையை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதில் சீனா வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பெய்ஜிங்கில் கடந்த 12 – 13 ஆம் திகதிகளில் சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அபிவிருத்திக்கான உலகளாவிய நடவடிக்கை பேரவையின் இரண்டாவது உயர்மட்ட மாநாட்டின் பக்க நிகழ்வுகளில் ஒன்றாக திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவரகத்தின் பிரதித்தலைவர் யாங் வென்குன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது மிகமோசமான பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதில் இலங்கை அடைந்திருக்கும் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்த திறைசேரியின் செயலாளர், பெரும்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதையும், உயர்வானதும் நிலையானதுமான பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதையும் இலக்காகக்கொண்டு அமுல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.

அதேபோன்று சீன ஏற்றுமதி, இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) உள்ளடங்கலாக இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கிய சீன அரசாங்கத்துக்கும் மஹிந்த சிறிவர்தன தனது நன்றியை வெளிப்படுத்தினார்.

அதுமாத்திமன்றி சர்வதேச நாணய நிதிய நிபந்தனையின் பிரகாரம் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு செயன்முறையை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதில் பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளால் இணைத்தலைமை தாங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவின் அங்கத்துவ நாடுகளுடன் இணைந்து சீனாவினால் வழங்கப்பட்ட வலுவான ஆதரவையும் திறைசேரியின் செயலாளர் இதன்போது நினைவுகூர்ந்தார்.

மேலும் கடன்மறுசீரமைப்பு செயன்முறையிலும், அதற்கு அப்பாலும் சீன அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட உதவிகளுக்கும் இலங்கை மக்கள் சார்பில் அவர் நன்றியை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply