கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் நிறைவுக்கு வந்தன
கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தன. இதுவரை இந்த மனிதப் புதைகுழியில் இருந்து 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விஷேட சட்ட மருத்துவ நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்ததாவது:- முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 10ஆவது நாளான இன்று (நேற்று) ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக் கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிச் சன்னம், திறப்புக் கோர்வை என்பனவும் மீட்கப்பட் டுள்ளன. இரண்டு கட்டங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் போது இன்றுடன் (நேற்றுடன்) 52 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அடுத்துவரும் நாள்களில் இந்தப் புதைகுழி தொடர்பான நீதிமன்ற நடவடிக்கை கள் தொடரும் என்றார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர்இணைப்பினைப்பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை அகழ்ந்தபோது மனிதப்புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது.
இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டமருத்துவ அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் அந்த மனிதப்புதைகுழியில் இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட் டன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான நிலையில் நேற்றுடன் அகழ்வுப் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply