கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்
அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இயங்குநிலை தென்மேற்கு பருவமழை காரணமாக, அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் மிக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரைபடத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள கடற்பகுதியில் மறு அறிவித்தல் வரை பயணிக்க வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவித்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply