தேர்தலை பிற்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்கவே தேர்தல் ஆணைக்குழு தேர்தல் அறிவிப்பை பிற்படுத்தி வருகிறது : லக்ஷ்மன் கிரியெல்ல
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவிப்பு செய்ய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைத்தும் அதனை மேலும் பிற்படுத்திவருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவர்களின் இந்த நடவடிக்கை தேர்தலுக்கு ஏதாவது ஒருவழியில் தடையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்குவதாகும் என எதிர்க்கட்சின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை கட்சி தலைவர்களின் கூட்டம் இடம்பெற்று முடிந்த பின்னர் அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது. இதில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை. என்றாலும் அடுத்த பாராளுமன்ற அமர்வின்பாேது அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கான சாத்தியம் இருக்கிறது.
அத்துடன் ஜூலை 17ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு விடுத்து, திகதியை அறிவிப்பு செய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கிறது என்பது அனைவரும் அறிந்திருந்த விடயம். என்றாலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்த மாதம் இறுதியில் அறிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கு ஏன் மாத இறுதிவரை பார்த்துக்கொண்டிருக்கவேண்டும் என கேட்கிறேன். தேர்தல் ஆணைக்குழுவின் இந்த நடவடிக்கையில் எமக்கு சந்தேகம் எழுகிறது.
தேர்தலை பிற்படுத்துவதற்கு ஏதாவது வழிவகைகளை அமைத்துக்கொள்ள அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கே தேர்தலுக்கான திகதியை அறிவிப்பு செய்யாமல் தேர்தல் ஆணைக்குழு இதனை பின்தள்ளி வருகிறது. அவ்வாறு இல்லை என்றால் மாத இறுதிவரை பார்த்துக்கொண்டிருக்காமல் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை உடனடியாக அறிவிக்க வேண்டும்.17ஆம் திகதிக்கு பின்னர் அவர்களுக்கு அதிகாரம் கிடைப்பதென, நீண்ட நாட்களுக்கு முன்பே அவர்களுக்கு தெரியும். அப்படியானால் அவர்கள் அதற்காக தயாராகி இருக்கவேண்டும்.
நாங்களும் தொடர்ச்சியாக 35 வருடங்காள பாராளுமன்றத்தில் இருக்கிறோம்.அரச அதிகாரிகள் திரும்பும்போது, இதற்குத்தான் திரும்புகிறார்கள் என்பது எங்களுக்கு புரிகிறது. அதனால் 17ஆம் திகதிக்கு பின்னர் மேலும் 10, 12 நாட்கள் இடமளிப்பது என்பது அரசாங்கத்துக்கு இடமளிப்பதாகும். அடுத்த வாரம் பாராளுமன்றம் கூடும்போது, அதன் மூலம் அல்லது நீதிமன்றம் மூலம் தேர்தலை பிற்படுத்துவதற்கு ஏதாவது தடை ஒன்றை கொண்டுவருவதற்கு அரசாங்கத்துக்கு இடமளித்திருக்கிறது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் இரண்டு தடவை தீர்ப்பளித்திருக்கிறது. அதேபோன்று தேர்தலுக்கு தேவையான பணத்தை வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க இன்னும் காலம் எடுக்கவேண்டும்?.அதனால் ஓரிரு நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவிக்கவேண்டும் என நாங்கள் தேர்தல் ஆணைக்குழுவை கேட்டுக்கொள்கிறோம்.
தேர்தலை விரைவாக நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சியும் தெரிவித்திருக்கிறது. ஆனால் திறைக்கு பின்னாலே அனைத்தும் இடம்பெறுகிறது.மாகாணசபை, உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியும். அதனால் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என இவர்கள் பகிரங்கமாக தெரிவித்தாலும் திறைக்கு பின்னிருந்தே மற்ற வேலைகளை செய்கிறார்கள் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply