தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் அரச அதிகாரிகள் பாராமுகமாக செயற்படின் நீதிமன்றத்தை நாடுவோம் : தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் தேர்தல் சட்டங்களுக்கு அமைவாக செயற்படவேண்டிய அரச அதிகாரிகள் பாராமுகமாக செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தொடரவிருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கத்தின் (பெப்ரல்) நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி, அரச அதிகாரிகளின் ஆதரவின்றி அரசியல்வாதிகளால் தேர்தல் சட்டங்களை மீறிச்செயற்படமுடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளியிட வேண்டும் எனவும், அடுத்தகட்டமாக நீதிமன்றத்தை நாடவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘ஊவா, வடக்கு, வடமத்திய மாகாணம் உள்ளிட்ட சில மாகாணங்களின் ஆளுநர்கள் உள்ளுராட்சிமன்றத்தேர்தல் வேட்பாளர்களைப் பல்வேறு பதவிகளுக்கு நியமித்துள்ளனர். இதுகுறித்து நாம் எமது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடிவருகின்றோம்’ எனவும் ரோஹண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு நாட்டின் தலைவர் தேர்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காவிடின், தாம் உயர்நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டியிருக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் சுமார் 20 வேட்பாளர்கள் களமிறங்கக்கூடும் என எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.
அதேவேளை இவ்விடயம் தொடர்பில் பிரஸ்தாபித்துள்ள ஜனநாயக மறுசீரமைப்புக்கள் மற்றும் தேர்தல் கற்கைகள் நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, அரசாங்கம் தேர்தல் நோக்கங்களுக்காக அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply