ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருமா சென்னையில் ஆர்ப்பாட்டம்
எதிர்வரும் 8ஆந் திகதி புதுடில்லி செல்லும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
” இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 8ஆந் திகதி புதுடில்லி வருவதாகத் தெரிகிறது. முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர். போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவோ அச்சிக்கலுக்கான அரசியல் தீர்வை உருவாக்கவோ இலங்கை அரசாங்கம் சிறிதும் முனைப்புக் காட்டவில்லை.
கடந்த ஜனவரி மாதத்திற்குள் வவுனியா முகாம்களிலுள்ள அனைவரையும் விடுவித்து அவரவருக்கான சொந்த வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தப் போவதாகவும் மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளை நிறைவேற்றப் போவதாகவும் எள்முனையளவும் அக்கறை காட்டவில்லை.
இன்னும் லட்சக்கணக்கானோர் வவுனியா முகாம்களில் சிக்கிச் சீரழிந்து வருகின்றனர். அம்முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு மறு வாழ்வுப்பணிகள் ஏதும் செய்யப்படாத நிலையில் அனாதைகளாய் அல்லாடி வருகின்றனர்.
இத்தகைய நிலையில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அடைக்கலம் தேடித் தப்பித்துச் சென்ற தமிழர்களையும் கடல் பகுதிகளில் சுற்றி வளைத்துத் தாக்குகின்ற கொடுமைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தியாவுக்கோ அல்லது சர்வதேச சமூகத்திற்கோ அச்சப்படாமல், மனிதநேய மரபுகளையும் மதிக்காமல் இலங்கை அரசு நடந்து கொள்கிறது. எனவே அதன் அதிபரின் இந்திய வருகை மேலும் ஏமாற்று நடவடிக்கையாகவே அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
எனவே, அவரது வருகையை எதிர்க்கும் வகையிலும் அந்த அரசின் மனித நேயமற்ற போக்குகளைக் கண்டிக்கும் வகையிலும் எதிர்வரும் 8ஆந் திகதி விடுதலை சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் சென்னையில் எனது தலைமையில் நடைபெறுகிறது.
அந்த அறப்போராட்டத்தில் மனிதநேயமுள்ள ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply