லிபியாவில் சி.ஐ.ஏ.வுக்கு முக்கியப் பங்கு!

 லிபியா நாட்டில் அதிபர் மம்மர் கடாஃபியைப் பதவியிலிருந்து அகற்றுவது என்ற முடிவை அமெரிக்காவில் யார் எடுத்தார்களோ, அந்தப் பணியில் முன்னணியில் இருப்பது அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.தான் என்கிறது “நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு.கடாஃபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்த ஜனநாயகவாதிகளுக்கு உதவும் நடுநிலையாளர்களைப் போல சி.ஐ.ஏ. ஏஜெண்டுகள் அவர்களை அணுகினார்கள். அவர்களுடைய போராட்டத்துக்கு எல்லாவித ஆதரவும் தருவதாக உறுதி அளித்தார்கள். பணம், ஆயுதம் போன்றவற்றைத் தருவதாக வாக்குறுதி அளித்ததுடன் சில சிறிய உதவிகளையும் உடனுக்குடன் அளித்தார்கள்.

இதனால் ஜனநாயக ஆதரவாளர்கள் பலரும் அவர்கள் சி.ஐ.ஏ. ஏஜெண்டுகள் என்ற சந்தேகமே ஏற்படாமல் நாட்டு அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார்கள்.சி.ஐ.ஏ. ஏஜெண்டுகள் தங்களுடைய அமைப்பு மூலம் திரட்டிய தகவல்களுடன் அரசு எதிர்ப்பாளர்கள் கூறிய தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்து லிபிய அரசின் நடவடிக்கைகளைத் துல்லியமாகக் கணித்தார்கள்.அத்துடன் லிபிய ராணுவத்தின் படைபலம், படைகள் இருக்கும் இடம், படைகளின் நடமாட்டம், அதிகாரிகளின் நிர்வாக அமைப்பு, லிபிய ராணுவத்திடம் உள்ள ஏவுகணைகள், மிகப்பெரிய ஆயுதங்கள், ஆயுதக் கிடங்கு, ரகசியத் தகவல் மையங்கள், கேந்திர ராணுவ மையங்கள், தகவல் தொடர்பு கட்டமைப்பு, லிபிய ராணுவத்துக்கு உதவிகள் வரக்கூடிய வழிகள் ஆகிய அனைத்தையும் அறிந்து அமெரிக்க ராணுவத்துக்குத் தகவல் தந்தனர்.கடாஃபியின் கவச வாகனப் படைகளும் டேங்குகளும் எங்கு, எத்தனை எண்ணிக்கையில் இருக்கின்றன, அடுத்து எங்கே செல்கின்றன என்று தகவல் திரட்டி அமெரிக்கா தலைமையிலான நேடோ படைப்பிரிவுக்குத் தெரிவித்தனர்.

அவர்கள் டாங்குகளைத் தங்களுக்குச் சாதகமான இடத்தில் குண்டுவீசி கொத்துகொத்தாக அழித்தனர். அத்துடன் லிபிய தரைப்படையின் பீரங்கி படைப்பிரிவு, ஏவுகணைகளை ஏவ உதவும் தளங்கள் ஆகியவற்றையும் “நேடோ’ தாக்கி அழிக்க சி.ஐ.ஏ. தகவல்கள் உதவின.லிபியாவில் அரசுக்கு எதிராகப் போராட்டம் தொடங்கிய ஜனநாயக ஆதரவாளர்களுக்கு ஆயுதங்களையும் உதவிகளையும் அளிக்க ரகசிய ஆணையொன்றில் அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டார். அதில் குறிப்பிடப்பட்ட வகையில் பணமும் பிற உதவிகளும் தரப்பட்டன, ஆனால் ஆயுதங்களைத் தரத்தான் அமெரிக்க ராணுவத் தலைமையகம் தயங்குகிறது.கடாஃபியை எதிர்க்கிறார்கள் என்பதற்காகவே ஆயுதங்களைக் கொடுத்துவிட்டால் நாளை அவர்கள் அமெரிக்காவையும் எதிர்க்கத் தொடங்கினால் என்னாவது, ஆயுதங்களை அவர்கள் வேறு யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு அல்லது விற்றுவிட்டு இந்த எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டால் என்ன செய்வது என்பது புரியாததால் இப்போதைக்கு ஆயுதங்களைத் தராமலேயே காலத்தைக் கடத்துகின்றனர்.

லிபியாவில் பாலைவனம் மிகப்பரந்த சமவெளியாகக் காட்சி தருகிறது. அத்துடன் மப்பும் மந்தாரமுமான மேகக் கூட்டமோ, பனி மூட்டமோ இல்லை. எனவே அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்களும் ஆள் இல்லாத ஏவுகணை வீச்சு விமானங்களும் எளிதாகப் பறந்துவரவும் லிபிய ராணுவ இலக்குகளைக் குறி பிசகாது தாக்கவும் முடிகிறது.அத்துடன் அமெரிக்காவின் உளவு செயற்கைக் கோள்களும், ஆள் இல்லாமலேயே பறந்து இலக்கைத் தாக்கக்கூடிய டுரோன் ரக விமானங்களும் லிபியாவை அங்குலம் அங்குலமாக படம் பிடித்துக் காட்டிக்கொண்டே இருக்கின்றன. எனவே அமெரிக்காவின் “”கழுகுக் கண்களிலிருந்து” லிபியா தப்பவே முடியாது என்று தோன்றுகிறது. லிபியாவை “நேடோ’ தாக்கினாலும் அதன் கண்ணாகவும் கரங்களாகவும் செயல்படுவது சி.ஐ.ஏ.தான் என்று தெரிகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply