உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ள இலங்கை – இந்திய அணிகள் இன்று மோதல்

10 ஆவது உலகக் கிண்ண இறுதிப் போட்டி மும்பை வென்கடே அரங்கில் இன்று நடைபெறவுள்ளது.இதில் இலங்கை – இந்திய அணிகள் மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் களமிறங்க வுள்ளன. இதில் 1996 ஆம் ஆண்டு உலக சாம்பியனான இலங்கை அணியும் 1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியும் இரண்டாவது தடவையாக கிண்ணத்தை சுவீகரிக்க களமிறங்கவுள்ளன.

உலகக் கிண்ண தொடரின் ஆரம்ப சுற்று மற்றும் காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் சரிசமமான திறமையை வெளிக்காட்டியுள்ள இவ்விரு அணிகளும் இன்றைய இறுதி ஆட்டத்தில் கிண்ணத்தை வெல்ல கடைசிவரை போராடும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை அணியில் முத்தையா முரளிதரன் கட்டாயம் பங்கேற்க முயல்வார் என மும்பையில் நேற்று நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்ற அணித்தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்தார். எனினும் இறுதிப்போட்டியில் விளையாடும் 11 பேர் அணி, கள நிலவரங்களை பொறுத்து தேர்வு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெறும் முத்தையா முரளிதரன் விளையாடும் கடைசி சர்வதேச ஆட்டமாக இது அமையவுள்ளது. இதேவேளை இலங்கை அணியின் சகலதுறை வீரர் அன்ஜலோ மத்தியூஸ் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் சுராஜ்ரன்தீவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

மத்தியூஸ் நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் காயத்திற்கு உள்ளானார். இதனால் அவர் அந்தப் போட்டியில் ஓட்டம்பெற மேலதிக வீரர் ஒருவரின் துணையுடனேயே துடுப்பெடுத்தாடினார்.

இந்நிலையில் மத்தியூஸ¤க்கு பதில் ரன்தீவை அணியில் இணைப்பதற்கு ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.

இலங்கை அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரன்தீவ் இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஏற்கனவே இலங்கை அணியில் முரளி, மெண்டிஸ், ரங்கன ஹேரத் என மூன்று சுழற் பந்து வீச்சாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அஷிஷ் நெஹ்ராவும் காயத்திற்கு உள்ளாகியுள்ளார். நெஹ்ராவின் விரல் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பதில் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மும்பை பொலிஸாருடன் இணைந்து தேசிய பாதுகாப்பு படை கொமாண்டோக்கள் இந்திய மத்திய துணை இராணுவம், மராட்டியத்தின் போர்ஸ் ஒன் அதிரடிப்படை, அதிவிரைவுப் படை மராட்டிய மாநில மேலதிக பொலிஸ் ஆகியோர் வான்கடே மைதான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வான்வழி பாதுகாப்புக்காக மும்பை அருகில் உள்ள இந்திய கடற்படை தளம், விமானப்படை தளம் மற்றும் கட லோர காவல் படை தளம் ஆகியவை எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. கடற்படை கொமாண்டோ படையும், ஹெலிகொப்டர்களும் தயாராக இருக்கின்றன. மேலும் மைதானம் அருகே விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறும் வான்கடே ஸ்டேடியத்தை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங் களுக்காக மைதானம் அமைந்துள்ள பகுதியின் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மைதானத்திற்கு வரும் ரசிகர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்வார்கள். மைதானத்தை சுற்றியுள்ள வளையத்தில் மராட்டிய மாநில மேலதிக பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மும்பை பாதுகாப்பு பணிகளுக்காக நவிமும்பை மாநகர பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள்.

வான்கடே மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் 180க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த காமராக்கள் மூலம் ரசிகர்களை கண்காணிப்பதற்காக சிறப்பு பொலிஸ் கட்டுப்பாட்டு அறை இயங்கும்.

உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், பைனாகுலர், கமரா. சிகரெட் பற்ற வைப்பதற்காக பயன்படுத்தப்படும் லைட்டர்கள், பைகள் உள்ளிட்டவை கொண்டு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே பார்வையாளர்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்படுவர்.

வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனங்களை மோதி தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளதால் வான்கடே மைதானத்தைச் சுற்றி 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

மைதான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில உள்துறை அமைச்சர் ஆர். ஆர். பாட்டீல் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர். அவருடன் மும்பை மாநகர பொலிஸ் ஆணையர் அருப் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சென்றிருந்தனர்.

கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடந்த மாதம் முதலே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, கடல்சார் பொலிசார் மற்றும் கடலோர பாதுகாப்பு பொறுப்பான மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. கடற்படை போர்க் கப்பல்களும், விமானங்களும் குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளை இடைவிடாமல் கண்காணித்து வருகின்றன.

இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான விரைவாக தாக்கும் கப்பல், ரோந்து சுற்றும் கப்பல், எதிரிகளை விரைவாக இடைமறிக்கும் கப்பல் தொடர்ச்சியாக கடலோர பகுதிகளில் ரோந்து வருகின்றன.

கடற்கரை பகுதிகளில் சந்தேகத்துக்கிடமாக யாராவது நடமாடினால் அவர்களை பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply