மக்கள் போராட்டத்தால் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கான பணிகள் முடக்கம்
அமைக்கப்பட்டு வரும் அணு மின் நிலையத்திற்கான பணிகள் தற்காலிகமாக முடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அணு உலைகள் அமைவதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள், பல்வேறு சாலைத் தடைகளை அமைத்துள்ளதால், ஆலைக்குள் பணியாளர்கள் வரமுடியாத நிலை இருப்பதாக கூடங்குளம் அணு மின் திட்டத்தின் இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.
சாதாரணமாக 4 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும், அணு மின் உற்பத்தித் துறையைச் சேர்ந்த 600 முதல் 800 பேரும் தினந்தோறும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், ஆனால் தற்போது ஏற்கனவே ஆலைக்குள் சென்ற 100 பேரைத் தவிர வேறு யாரும் அந்த வளாகத்துக்குள் இல்லை என்றும் பாலாஜி தெரிவித்தார்.
அங்கே பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடந்து வருவதாகவும், போராட்டம் தொடர்ந்தால் முதல் அணு உலையை வரும் டிசம்பரில் துவக்க முடியாமல் போகலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தைகளுக்கு வர வேண்டும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜப்பானின் ஃபுக்கோஷிமா விபத்துக்குப் பிறகு அணு உலை தொடர்பான அச்சங்கள் அதிகரித்துள்ள நிலையில் மற்ற சில நாடுகளைப் பின்பற்றி இந்தியாவும் அணு உலைகளை மூட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மாதத் துவக்கத்தில் போராட்டக் குழுவினரை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தார். அணு உலை பாதுகாப்பு குறித்த அச்சங்களைக் களைய நிபுணர் குழு அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அதேவேளை, இந்த அணு ஆலையை அமைக்க தமிழக அரசு உதவ வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அணு உலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை முதலில் தமிழக முதல்வர் வெளியிட்டிருந்தாலும், போராட்டம் தீவிரமடைந்த நிலையில் மக்களின் அச்சங்களைப் போக்கும்வரை அணு ஆலை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அமைச்சரவை நிறைவேற்றியது.
அணுப் பாதுகாப்பு குறித்து சுயாதீனமாக உறுதி செய்யப்படும்வரை புதிய உலைகளுக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது என்று கோரி ஒய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் சிலர் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று பொதுநல வழக்கொன்றை தொடுத்துள்ளனர். நாட்டின் பிற இடங்களிலும் அணு உலைகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply