நில முறைகேடு: யெதியூரப்பா நீதிமன்றத்தில் சரண்

பெங்களூரிலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும், நிலத்தின் பயன்பாடுகளை மாற்றுவதற்கான அரசாணைகளைப் பிறப்பித்து, அதன் மூலம் ஆதாயமடைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாஜகவைச் சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். யெதியூரப்பா நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். கர்நாடக லோக் அயுக்தா நீதிமன்றம், யெதியூரப்பாவின் ஜாமீன் மனுவை நிராகரித்து, அவருக்கு எதிராக எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த நிலையில், சனி மாலை லோக் அயுக்தா நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்.
22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக, சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதீந்திர ராவ், யெதியூரப்பா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கிருஷ்ணையா ஷெட்டியையையும் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதையடுத்து, போலீஸ் அதிகாரி ஒருவர் மூலம் கைது வாரண்டை வழங்க முடிவு செய்யப்பட்டு, அந்த அதிகாரி போலீஸாருடன் யெதியூரப்பா வீட்டுக்குச் சென்றார்.

ஆனால், அந்த நேரத்தில் அவர் வீட்டில் இல்லை. மாறாக, யெதியூரப்பா வேறு ஒரு வாகனத்தில் நேராக நீதிமன்றத்துக்கு வந்து சரணடைந்தார்.

அவரை வரும் 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய இருப்பதாக யெதியூரப்பாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஊழலுக்குத் துணைபோவதாகக் குற்றம் சாட்டி கடுமையாகப் பிரசாரம் செய்துவரும் பாஜகவுக்கு, விவகாரம் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்று  கூறுகிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply