இலங்கைக்கு எதிரான தீர்மானம் : மத்திய அரசின் நிலை குறித்து கிருஷ்ணா
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தில், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா கூறினார். பெங்களூரில் இருந்து சொந்தப் பயணமாக சிங்கப்பூர் செல்லும் வழியில் நேற்று மதியம், 1.15 மணிக்கு வந்த அமைச்சர் கிருஷ்ணா விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.
பேட்டி விபரம் :
* போர் நெறிமுறைகளை மீறி செயல்பட்டதாக இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தில், இந்தியாவின் நிலை என்ன என்பதை மத்திய அரசு முடிவு செய்துவிட்டதா?
“இதுவரை எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவும், இலங்கையும் நீண்ட காலமாக நட்புறவுடன் உள்ள நாடுகள். இலங்கை அண்டை நாடு மட்டுமல்ல; சகோதர நாடாகவும் உள்ளது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் மீது முடிவெடுப்பது என்பது, ஓர் உணர்வுப்பூர்வமான பிரச்சினை. எனவே, இந்த விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. என்ன முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்து, மத்திய அரசு மிகவும் ஆழமாக சிந்தித்து வருகிறது. விரைவில் அதுகுறித்து அறிவிக்கப்படும்.”
* இலங்கை பிரமுகர்கள் அடிக்கடி வருவதால், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிக்கல் ஏற்படுவதாகவும், இந்த விஷயத்தில் மத்திய அரசு தமிழக அரசுடன் கலந்து பேசிய பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளாரே?
“இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு, இங்கு பல்வேறு மொழிகள், இனத்தைச் சேர்ந்தோர் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். இலங்கையில் இருந்து வருவோரில் பெரும்பாலானோர் தமிழ் பேசுபவர்களாகவே உள்ளனர். சுற்றுலா பயணிகளாக வருபவர்களை வர வேண்டாம் என்று கூற முடியாது. இருப்பினும், இந்தியா – இலங்கை நட்புறவை பாதிக்காத வகையில், ஒரு நல்ல முடிவு எட்டப்படும். இது குறித்த தமிழக முதல்வரின் கோரிக்கை நிச்சயமாகப் பரிசீலிக்கப்படும்.”
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply