சிரியாவில் சண்டை நிறுத்தத்துக்கு அன்னான் முயற்சி
ஐ.நா.மன்றத்தின் முன்னாள் தலைமைச் செயலரான கோஃபி அன்னான் அமைதியைக் கொண்டுவரும் முயற்சியாக சிரியாவில் சுற்றுப் பயணத்தை துவங்கியுள்ளார்.ஐ.நா. மன்றம் அரபு லீக் என்று இரண்டு அமைப்புகளுக்குமான விசேட தூதுவராக அன்னான் சிரியா சென்றுள்ளார்.உலகின் மோதல் பகுதி ஒன்றுக்கு அன்னான் செல்வது என்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல.
சிரியா சென்று இறங்கியவுடன் உடனடியாக அவர் அதிபர் பஷர் அல் அஸத்துடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றார்.
அரசு தரப்பும், கிளர்ச்சிப் படைகள் தரப்பும் முழுமையான மோதல் நிறுத்தத்தைக் கொண்டுவர வேண்டும், மனிதாபிமான உதவிப் பொருட்கள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும், அரசாங்கமும் எதிர்த்தரப்பும் அரசியல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் அன்னான் கோருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
கோஃபி அன்னானுக்கும் நாட்டின் அதிபர் பஷர் அல் அஸத்துக்கும் இடையே ஆக்கப்பூர்வமான ஒரு சூழலில் சந்திப்பு இடம்பெற்றதாக சிரியாவின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சிரியாவில் வெளிநாடுகள் இராணுவ நடவடிக்கை எடுப்பது என்பதை தான் எதிர்ப்பதாக அன்னான் கூறியிருந்தது அந்நாட்டின் எதிர்க்கட்சிக் குழுக்களுக்கு ஆத்திரத்தைத் தந்திருந்தது.
அன்னானின் வருகையே வெளிநாட்டுத் தலையீட்டை தாமதப்படுத்துவதற்கான ஒரு உத்திதான் என்று எதிர்க்கட்சிக் குழுக்கள் விமர்சிக்கவும் செய்திருந்தன.
கத்தார் குரல்
இந்நிலையில், சிரியாவுக்குள் அரபு நாடுகள் மற்றும் பிற வெளிநாடுகள் அமைதிகாப்பு படையினரை அனுப்ப வேண்டும் என கத்தார் குரல்கொடுத்துள்ளது.
சிரியாவின் அஸத் அரசாங்கத்துக்கு எதிராக கத்தாரி பிரதமர் தொடர்ந்து அரபு லீக்கில் குரல்கொடுத்துவந்துள்ளார்.
சிரியாவில் தினந்தோறும் திட்டமிட்டு நடக்கின்ற படுகொலைகளை தடுத்து நிறுத்தவேண்டிய தார்மீக மற்றும் மனிதாபிமானக் கடமை சர்வதேச சமூகத்துக்கு இருக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.
ரஷ்யா நிலைப்பாடு
ஆனால் எகிப்தியத் தலைநகர் கெய்ரோவில் வைத்து அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து வருகின்ற ரஷ்ய வெளியுறவு அமைச்சரோ, வெளிநாடுகள் கண்மூடித்தனமாக சிரியா விவகாரத்தில் தலையிடக்கூடாது என்றும் அப்படியான தலையீடுகளை ரஷ்யா எதிர்க்கிறது என்றும் கூறியுள்ளார்.
கத்தாரும் ரஷ்யாவும் வெளியிட்டுள்ள ஒன்றுக்கொன்று முரணான அறிக்கைகள் சிரியா சென்றுள்ள சமாதானத் தூதுவர் கோஃபி அன்னான் மீது எந்த அளவுக்கு எதிரெதிரான அழுத்தங்கள் இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply