மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு
சுதந்திர இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று 18ம் திகதி காலை, சுபநேரம் 10 மணிக்கு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படுகின்றது. இவ்வைபவத்தையொட்டி மத்தள பிரதேசம், உட்பட ஹம்பாந்தோட்டை மாவட்டம் அடங்கலாக தென் மாகாணம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஸ்ரீ லங்கன் விமானம் மூலம் இச்சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி மத்தள விமான நிலையத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவிருக்கின்றார்.
மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இச்சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் 220 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிறைவடைந்துள்ளன. இங்கு 3500 மீற்றர் நீளமும், 75 மீற்றர் அகலமும் கொண்ட விமான ஓடுபாதை, விமான பாதை, டெக்ஸி வீதி, சரக்கு மற்றும் பயணிகள் விமான இறங்கு தளம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.
உலகிலுள்ள மிகப்பெரிய விமானமான ஏயார் பஸ் 380 ரக விமானத்தைத் தரையிறக்கக் கூடிய வசதியும் இவ்விமான நிலையத்தில் உள்ளது. இங்கு பயணிகள் சேவை, பொதிகள் சேவை, சரக்குகளைக் கையாளும் சேவை என்பன இடம்பெறவிருக்கிறது. இரண்டாயிரம் ஹெக்டேயர் பரப்பைக் கொண்ட மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீ-லங்கன் கார்கோவுக்கு 5000 சதுர மீற்றர் பரப்பைக் கொண்ட 60,000 மெற்றிக் தொன் சரக்குகளைக் கையாளக் கூடிய வசதியும் உள்ளது. முதற்கட்டமாக இவ்விமான நிலையத்திலிருந்து ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் ரியாத்துக்கும், நான்கு விமானங்கள் மாலைக்கும், இரண்டு விமானங்கள் பீஜிங்குக்கும், ஒன்று சங்காய் ஊடாக பேங்கொக்குக்கும் சேவையில் ஈடுபடவிருக்கின்றன. இரண்டு மிஹின் லங்கா விமானங்கள் புத்தகாயாவுக்கு சேவையில் ஈடுபடும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன கூறியுள்ளார்.
இலங்கை வரலாற்றில் திறந்து வைக்கப்பட்டவுடனேயே சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்துடன் செயற்படும் விமான நிலையமாக மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம், விளங்குவதாகவும் அவர் கூறினார்.
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் 1944 களில் பிரிட்டனின் ரோயல் விமானப் படையினது இறங்குதளமாகவே இரண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்தது. என்றாலும் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலைய நிர்மாண வேலைகள் 1964ம் ஆண்டில் தான் ஆரம்பிக்கப்பட்டது. அதன் நிர்மாணப் பணிகள் 1967ம் ஆண்டில் நிறைவடைந்தது. என்றாலும் 1968ம் ஆண்டில்தான் அதற்கு சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்து கிடைக்கப் பெற்றதாகவும் அவர் கூறினார். மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக விமான சேவைகளை நடாத்துவதற்கு 23 சர்வதேச விமானங்கள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளன.
இவ் விமான நிலையத்தில் தற்போது வருடத்திற்கு பத்து இலட்சம் பயணிகளை கையாளக் கூடிய வசதி உள்ளது. என்றாலும் இச்சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் பூர்த்தியானதும் வருடத்திற்கு 50 இலட்சம் பயணிகளைக் கையாளகக்கூடிய வசதியைப் பெறும் என்றும் அமைச்சர் கூறினார். இதேவேளை மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து எயார் அரபியா விமானம் தனது முதலாவது பயணத்தை இன்று சார்ஜாவுக்கு ஆரம்பிக்கும் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் கம்பனியின் தலைவர் பிரசன்ன விக்கிரமசூரிய கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply