இலங்கை ஏற்றுமதியில் கணிசமான அளவு வீழ்ச்சி
இலங்கையில் ஏற்றுமதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் கணிசமான அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது அரசின் ‘மஹிந்த சிந்தனையில்’ திட்டமிட்டிருந்த ஏற்றுமதி இலக்குக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி சிறிது கவலை அளிக்கக் கூடிய வகையில் இருந்தாலும், இதிலிருந்து மீள முடியும் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி யூசூஃப் மரைக்காயர் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வீழ்ச்சி இதற்கு ஒரு முக்கிய காரணம் எனவும் அவர் கூறுகிறார்.
இலங்கையின் வெளிநாட்டு ஏற்றுமதிகளில் 43 சதவீதம் ஆயத்த ஆடைகள் மூலமானவை என்று சுட்டிக்காட்டும் அவர், அதில் பெரும்பான்மையானவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கே ஏற்றுமதி ஆவதால், அந்நாடுகளின் பொருளாதார நிலை தமது ஏற்றுமதியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவும் கூறுகிறார்.
அதேவேளை குறுகிய கால வீழ்ச்சியின் காரணமாக எதிர்காலத்திலும் இலங்கை ஏற்றுமதிகள் வீழ்ச்சியடையும் என்று கொள்ள முடியாது எனவும் சொல்கிறார்.
இலங்கையில் மனித உரிமைகள் மேம்படவில்லை என்று கூறி ஐரோப்பிய ஒன்றியம் அங்கிருந்து ஏற்றுமதியாகும் பல பொருட்களுக்கான ஜி எஸ் பி பிளஸ் எனப்படும் வரிச்சலுகையை விலக்கிக் கொண்டால்தான் ஆடை ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் யூசூஃப் மரைக்காயர் மறுக்கிறார்.
மீன்பிடித்துறையிலும் ஏற்றுமதிகள் சிறிய வீழ்ச்சியை கண்டுள்ளன என்பதை ஏற்றுக் கொள்ளும் அவர், அதனால் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை எனவும் கூறுகிறார்.
அதேபோல இரத்தினக்கற்களின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது என்றாலும் அது பெரிய அளவில் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
எனினும் ஏற்றுமதிகளை ஊக்குவிக்க, ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகளை அளிக்கும் திட்டங்களை அரசு முன்னெடுக்கவுள்ளது எனவும் யூசூஃப் மரைக்காயர் தெரிவித்தார்.
தேயிலை, ரப்பர் போன்ற விவசாய ஏற்றுமதி துறைகளை அபிவிருத்தி செயல்பாடுகளை அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply