எம் தாயகத்திற்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்த முயல்பவர்களுக்கு இடமளிக்க வேண்டாம் – ஜனாதிபதி
இனவாத, மதவாத நாடாக முத்திரை குத்துவதற்கு எவருக்கும் இடமளிக்காத வகையில் செயற்பட வேண்டியது எம் தாய் நாட்டின் மீது பற்று கொண்ட அனைவரதும் கடமை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இனவாதத்தையும், மத வாதத்தையும் தூண்டிவிட்டு எம் தாயகத்திற்கு எதிராகப் பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதற்குப் பார்த்துக் கொண்டிருப்போருக்கு அதற்குரிய துரும்பை வழங்காதீர்கள் என்றும் ஜனாதிபதி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.
கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபை கேகாலை ரத்னசார நாயக்க தேரரை தென் மாகாண விகாரைகளுக்குப் பொறுப்பான நாயக்க தேரராக நியமித்துள்ளது.
அதனையொட்டி மாத்தறை வேரஹேன விகாரை வளாகத்தில் நேற்று முன்தினம் மாலையில் இடம்பெற்ற வரவேற்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அஸ்கிரிய பீடாதிபதி உடுகம ஸ்ரீ புத்த ரக்கித மகா நாயக்க தேரர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர் உள்ளிட்ட முக்கிய பெளத்த தேரர்கள் அனேகர் பங்குபற்றிய இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-
நாம் பெளத்தர்கள் என்ற வகையில் நாட்டில் வாழும் சகல மதத்தினருக்கும் முன்னுதாரணம் மிக்கவர்களாக திகழ வேண்டும்.
இந்த நாடு அனர்த்தங்களுக்கு உள்ளான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாத்தது எமது பெளத்த தேரர்கள் தான். அதனை எவரும் மறுக்க முடியாது. தவறுகளை சீராக்குவதும், நல்வழிகாட்டல்களை வழங்க வேண்டியதும் தேரர்களின் பொறுப்பு. நாட்டில் வாழும் சகல மக்களினதும் நல் வாழ்வுக்காக வழங்கப்படும் வழிகாட்டல்களை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது.
தேரர்கள் இருந்தால் தான் பெளத்த மதம் இருக்கும். அதேபோல் நாடு இருந்தால் தான் மக்களும் இருப்பர். ஆகவே, நாட்டைப் பாதுகாப்பதற்காக சகலரும் பொறுமையுடனும் தூர நோக்குடனும் செயற்படுவது அவசியம்.
எம்மை இந்நாட்டில் வாழுகின்றவர்கள் மாத்திரமல்ல உலகமும் பார்த்துக் கொண்டிருக்கின்றது. அதனால் நாம் எல்லா செயற்பாடுகளிலும் முன்மாதிரியானவர்களாகச் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, மகிந்த யாப்பா அபேவர்த்தன,இ டளஸ் அழகப்பெரும, பிரதியமைச்சர் எம். கே. ஏ. டி. எஸ். குணவர்த்தன, தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply