எமது நாட்டின் பிரச்சினைக்கு வெளிநாடுகளில் தீர்வு காண்பதை விடுத்து ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக ஒன்றிணைந்து செயற்படுவோம்

நாட்டின் தேசிய நல்லிணக்கம் சமாதானம் மற்றும் அபிவிருத்தியை நிலை நாட்டும் வகையில் எமது நாட்டுக்கே உரிய தனித்துவமான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தார்.எமது நாட்டின் பிரச்சினைக்கு வெளிநாடுகளில் தீர்வு காண்பதை விடுத்து ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஒன்றிணைந்து செயற்படுவோம் என தெரிவித்த ஜனாதிபதி, சம்பந்தன் எம்.பி. தலைமையிலான பாராளுமன்ற குழுவும், சீ. விக்னேஸ்வரன் தலைமையிலான வட மாகாண சபை உறுப்பினர்களும் இதற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்திற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தேசிய அபிவிருத்திக்கும் நல்லிணத்துக்கும் எமது நாட்டுக்கே உரிய தீர்வொன்றைக் காண்பதற்கு அரசாங்கத்துடன் கைகோர்த்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் செயற்பட வேண்டும்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கான இரணைமடு நீர் வழங்கல் திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு 2016 இல் நிறைவு செய்யப்படவுள்ளது. மக்களின் அடிப்படைப் பிரச்சினையான இந்த நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண சகலரதும் ஒத்துழைப்பு அவசி யமாகும்.

மக்களை பணயக் கைதிகளாக வைக்க இதனைப் பயன்படுத்தக்கூடாது. இத்தகையதொரு விடயத்தினாலேயே மாவிலாறு போன்றதொரு துன்பகரமான சம்பவம் ஏற்பட்டது. அவ்வாறான சம்பவம் இனியும் ஏற்படக்கூடாது.

அவ்வாறானதொரு நிலை ஏற்படாமலிருக்க வட மாகாண சபை முதலமைச்சரும் உறுப்பினர்களும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

அத்தோடு 30 வருடம் நாட்டை சீரழித்த யுத்தத்தை மீண்டும் ஏற்பட இடமளிக்கக் கூடாது என்பதில் அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

எதிர்கால சந்ததியினருக்கு அமைதி சுபீட்சமுமான நாடொன்றை பெற்றுக்கொடுப்பது அனைவரதும் பொறுப்பாகும்.

இது எமது நாடு. நாம் அனைவரும் எமது மக்களுக்காகவே செயற்பட வேண்டும். அதுவே எமது பொறுப்பும் கடமையுமாகும்.

எமது மக்களுக்கான கடமையையே நாம் நிறைவேற்றுகின்றோம். இது தொடர்பில் எதிர்க் கட்சியினர் உணர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையை உதாரணம் காட்டி குறிப்பிட்ட ஜனாதிபதி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் வைராக்கியம் குரோதம் இன்றி ஒன்றிணைந்து நமது தாய் நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்றும் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply