தேர்தலை மார்ச் 29 ஆம் திகதியை விட வேறு தினங்களில் நடத்துவதற்கு வாய்ப்பில்லை :தேசப்பிரிய
மேல், தென்மாகாணசபைகளுக்கான தேர்தலை மார்ச் மாதம் 29 ஆம் திகதியை விட வேறு தினங்களில் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் தலைவர்களை தேர்தல் திணைக்களத்தில் சந்தித்து தேர்தல் ஆணையாளர் இரு மாகாணசபை தேர்தல்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார். இதன் போதே தேர்தல் ஆணையாளர் தேர்தல் திகதி குறித்து மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மார்ச் மாதம் 22 ஆம் திகதி தேர்தல் நடத்துவது கடினமாகும். ஏனெனில் தேர்தலுக்கான முன் தயாரிப்பு வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கு எமது திணைக்கள ஊழியர்களுக்கு அவகாசம் போதாது. இதேபோல் ஏப்ரல் மாதம் 5 ஆம்திகதி நடத்துவதானாலும் புதுவருடத்தை நெருங்கியுள்ளமையினால் ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்துவது கடினமாகும். எனவே மார்ச் மாதம் 29 ஆம் திகதியை விட வேறு தினங்களில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது என்று ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஆணையாளருடனான சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் அதன் செயலாளர் சுசில்பிரேமஜயந்த, ஐ.தே.க.வின் சார்பில் அதன் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் மனோகணேசன், ஊடகச் செயலாளர் சி. பாஸ்கரா, ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜயந்த கெட்டகொட, ஜாதிக ஹெலஉறுமயவின் சார்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜே.வி.பி.யின் சார்பில் அதன் செயலாளர் ரில்வின் சில்வா, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனநாயக்க மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தேர்தலின் போது அரச வளங்கள் முறையற்ற வகையில் பயன்படுத்துவதை தடுக்கவேண்டும். அரச சார்பான வேட்பாளர்களுக்கு விசேட சலுகைகளை வழங்கக்கூடாது அவ்வாறு சலுகைகள் வழங்கப்பட்டால் சகல கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் இத்தகைய சலுகைகள் வழங்கப்படவேண்டும். அரச ஊடகங்கள் அரச தரப்பு வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயற்படுவதை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேபோல் ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் நீதி நியாயமாக நடக்கவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளனர். எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் சந்தித்துப்பேசுவது என்று இந்தக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply