இலங்கையரென்ற தனித்துவத்துடன் செயற்பட்டால் எந்தவொரு சக்தியாலும் நாட்டை அசைக்க முடியாது : ரணீல்

இலங்கையரென்ற தனித்துவத்துடன், உறுதியான கட்டுக் கோப்பின் கீழ் அரசியல் செய்வோமாயின் உள்நாட்டு சக்திகள் மட்டுமன்றி வெளிநாட்டு சக்திகளால்கூட எம்மை அசைக்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். எமது நாட்டில் இனவாதம் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தவர் பிரபாகரன். பிரபாகரனே இல்லாத நிலையில் அதற்காக நாம் இனவாதம் மீண்டும் முளைவிடுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டுமெனவும் அவர் கேள்வி எழுப்பினார். இனம், மதம், குலம், கட்சி என்ற பாகுபாட்டிற்கு முடிவேயில்லை. இதனை உணர்ந்தவர்களாக நாம் இலங்கையர்களென்ற உறுதிப்பாட்டுடன் செயற்பட வேண்டும். இலங்கையர்களென்ற தனித்துவத்திற்கு மாறாக செயற்படுபவர்களை நாம் எதிர்த்து நிற்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெங்காலியர்கள், சீக்கியர்கள், தமிழர்கள் என பல மொழி பேசும் மக்களும் தமக்குரிய கலாசாரத்தை சிறந்த முறையில் பின்பற்றுகின்றனர். அது எவ்வாறான போதும் அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்ற தனித்துவத்திற்கு கீழேயே செயற்படுகின்றனர். உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி தாம் ஒரு இந்தியர் என்பதனை அவர்கள் பெருமையாக கூறுகின்றனர். ஆனால் இலங்கையைச் சேர்ந்த நாம் மட்டும் இலங்கையர் என்ற தனித்துவம் குறித்து சிந்திப்பதில்லை. இது நாட்டின் ஐக்கியத்திற்கும் தனிமனித முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதது எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் யு.எல்.எம். பாரூக்கின் 50 வருட அரசியல் வாழ்வை கெளரவிக்கும் விசேட நிகழ்வு புதன்கிழமை (20) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வ தேச மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகைலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறி னார்.அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்

பிற நாட்டவர்கள் இலங்கையை ஆட்சி செலுத்திய காலத்தில் அந்நிய இராணுவம் மலையகத்தை நோக்கி படையெடுப்பதனை தாமதிக்கவே சிங்கள மன்னர்கள் மலையகத்திற்கு செல்லும் வழிகளில் ஆங்காங்கே முஸ்லிம்களை குடியமர்த்தினர்.

முஸ்லிம்கள் தமது இரத்தத்தை கொடுத்தாயினும் நாட்டையும் தம்மையும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை சிங்கள மன்னர்களிடம் இருந்தமையே அதற்கு காரணம். போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்த இராணுவத்தினர் மழைக்காலங்க ளிலேயே நோய்வாய்ப்பட்டு பலவீன மடைந்து அதிகம் உயிரிழந்தனர். எனவே மழைக்காலம் தொடங்கும் வரை அவர்கள் மலைநாட்டை அடைவதனை தாமதிப்பதனை முஸ்லிம் கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வந்தனர்.

அத்தகைய விசுவாசத்தை சிங்களவர்கள் முஸ்லிம்கள் மீது அக்காலம் தொட்டே கொண்டிருந்தனர். அந்த வகையில் யு.எல்.எம் பாரூக் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் இலங்கையராகவே செயற்பட்டார். மக்கள் அவரை சமூகத்தின் சேவகனாக பாதுகாவலனாகவே அவரை கருதினர். இதன் மூலமே அவர் ருவென்வெல்லை தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

ஐக்கிய தேசியக் கட்சி சவால்களுக்கு முகம் கொடுத்த காலகட்டங்களில் இவர் கட்சிக்காக தன்னை அர்ப்பணித்து செயலாற்றினார்.

இதற்காக நான் எனது நன்றிகளை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இவர் இனம், மதம், கட்சி, குலம் என்ற பாகுபாடின்றி அனைவருடனும் அன்பாகப் பழகி அனைத்துவித கலாசார சம்பிரதாயப் பணிகளிலும் பங்கெடு த்தமைக்கு இன்று அனைத்து தரப்பையும் சேர்ந்த மக்கள் இங்கு வருகை தந்திருப்பதே சான்று பகர்கின்றது என்றும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply