13-வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்
இலங்கையில் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும், தமிழர்கள் பகுதியில் இன்னும் ராணுவம் உள்ளது. அதை இலங்கை அரசு வாபஸ் பெற வேண்டும் என்று தமிழர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதியில் இந்தியாவின் உதவியுடன் சில மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. என்றாலும் போரினால் பெரும் பாதிப்புக்கு உள்ளான தமிழர்களின் துயரம் இன்னும் தீரவில்லை. போர்க்குற்றம் குறித்து சுதந்திரமாக விசாரணை நடத்த சர்வதேச குழுவை அனுமதிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் தீர்மானம் நிறைவேற்றியுள்ள போதிலும், அந்த குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என்று அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார்.
இந்த நிலையில், இலங்கை தமிழ்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் பிரநிதிகள் குழுவினர் 5 பேர், இரண்டு நாள் பயணமாக இன்று காலை டெல்லி வருகிறார்கள். அவர்கள் இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசுகிறார்கள். நாளை (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்கள்.
இந்த சந்திப்புகளின் போது இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை, அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நரேந்திர மோடியுடனும், சுஷ்மா சுவராஜுடனும் அவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள்.
மேலும் தமிழர்களுக்கு உரிய அதிகார பகிர்வு கிடைக்கவும், 13-வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொள்வார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply