உளவாளி எனக் கூறி அரபு இஸ்ரேலியர் படுகொலை

இஸ்ரேலுக்காக உளவு பார்க்கும் நோக்கத்துடன் தங்கள் அமைப்பில் இணைந்ததாகக் கூறி, அரபு இஸ்ரேலிய இளைஞரை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்று, அதன் விடியோ காட்சியை செவ்வாய்க்கிழமை இணையதளத்தில் வெளியிட்டனர். சிறுவன் ஒருவன் மூலம் இந்தப் படுகொலையை நிறைவேற்றி, ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீண்டும் தங்கள் குரூரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சுட்டுரை (டுவிட்டர்) சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்ட அந்த விடியோவில் 19 வயது முகமது சயீத் இஸ்மாயில் முஸல்லாம், இஸ்ரேலிய உளவு அமைப்பு ஐ.எஸ். பயங்கரவாதிகளை உளவு பார்ப்பதற்காக தன்னை சிரியாவுக்கு அனுப்பியதாகக் கூறும் காட்சி இடம் பெற்றுள்ளது.

ஐ.எஸ். அமைப்பால் படுகொலை செய்யப்படுபவர்கள் வழக்கமாக அணிவது போலவே இளஞ்சிவப்பு நிற ஆடையுடன் அவர் அந்த விடியோவில் காட்சியளித்தார்.

அடுத்த காட்சியில், புல்தரையில் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் சயீத் இஸ்மாயிலுக்குப் பின் புறமாக 12-க்கும் குறைவான வயதே மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனும், பயங்கரவாதி ஒருவரும் ஐ.எஸ். சீருடையணிந்து நின்றிருந்தனர்.

அப்போது பிரெஞ்சு மொழியில் பேசிய அந்தப் பயங்கரவாதி, பிரான்ஸில் வசிக்கும் இஸ்ரேலியர்களுக்கு மிரட்டல் விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, அந்தச் சிறுவன் சயீத் இஸ்மாயிலின் முன்புறமாக வந்து அவரது நெற்றியில் கைத்துப்பாக்கியால் சுட்டான். பிறகு “இறைவன் மிகப் பெரியவன்’ என அரபு மொழியில் உரக்கக் கத்திய அந்தச் சிறுவன், சுருண்டு விழுந்திருந்த சயீத் இஸ்மாயில் மீது மேலும் நான்கு முறை சுட்டான்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குரூரப் படுகொலைகள் குறித்த விடியோக்களை இதுவரை வெளியிட்டு வந்த “ஃபர்கான்’ ஊடகப் பிரிவே இந்த விடியோவையும் வெளியிட்டுள்ளதால், இது நம்பகத்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply