புதிய தலைமுறை சேனல் அலுவலகம் மீது குண்டுவீசி தாக்குதல்
ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரண்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. இருப்பினும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சேதமும் ஏற்படவில்லை. அதிகாலை 3 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் இந்தச் செயலலில் ஈடுபட்டது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசப்பட்டதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அப்பகுதியில் சுற்றித் திரிந்ததும் கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், இருள் காரணமாக மர்ம நபர்கள் அடையாளம் தெளிவாக கேமராவில் பதிவாகவில்லை.
சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீஸார், வெடிகுண்டு வீசப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் வீசியது குறைந்த திறன் கொண்ட டிஃபன் பாக்ஸ் வெடிகுண்டு என தெரியவந்துள்ளது.
முன்னதாக இந்தச் சேனலில், மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதியன்று ‘பெண்களுக்கு தாலி தேவையா? இல்லையா?’ என்ற தலைப்பில் சிறப்பு விவாதம் ஒளிபரப்புவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. நிகழ்ச்சியை தடை செய்யும்படி வலியுறுத்தின.
இந்நிலையில், மகளிர் தினத்தன்று காலை டி.வி. அலுவலகம் முன்பு பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூடி, நிகழ்ச்சியை ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
அப்போது, அந்த டி.வி. சேனலில் பணிபுரியும் ஒளிப்பதிவாளர் செந்தில்குமரன், போராட்டத்தை வீடியோவில் பதிவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், அவரது கேமராவை பறித்து தரையில் வீசி உடைத்தனர். அவரையும் தாக்கினர். அப்போது அங்கே வந்த பெண் நிருபர் ஒருவரையும் போராட்டக்காரர்கள் தாக்க முயன்றனர்.
அதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸார், போராட்டக்காரர்கள் 10 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டத்தையடுத்து, குறிப்பிட்ட சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.
இந்நிலையில், கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் நடந்ததா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply