இலங்கை அதிபர் தேர்தலில் இந்திய உளவுத்துறை என்னை சதி செய்து தோற்கடித்தது: ராஜபக்சே குற்றச்சாட்டு
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 8–ந்தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபாலா சிறிசேனா வெற்றி பெற்று புதிய அதிபர் ஆனார். இந்த நிலையில் அதிபர் தேர்தலில் தனது தோல்விக்கு இந்தியாவின் உளவுத்துறை ‘ரா’ அமைப்பு சதி செய்ததாக ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு சென்றுள்ள நிலையில் ராஜபக்சே பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் நான் சதி செய்து தோற்கடிக்கப்பட்டேன். அதற்கு இந்திய உளவுத்துறை (‘ரா’ அமைப்பு) தலைவர் பின்னணியில் இருந்தார். தேர்தல் நடைபெறும் நாளில் கடைசி நிமிடம் வரை எனது தோல்விக்காக அவர் பாடுபட்டார்.
இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நான் குற்றம் சுமத்தவில்லை. ஏனெனில் அவர் ஒரு ஆண்டுக்கு முன்பு தான் பிரதமராக பதவி ஏற்றார். ஆனால் என்னை தோற்கடிக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மறைமுகமாக சதி வேலை நடந்தது.
நான் அதிபராக இருந்த போது பிரதமர் மோடியை 3 தடவை சந்தித்து பேசி இருக்கிறேன். கடைசியாக 5 இந்திய மீனவர்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட பிறகு ‘சார்க்’ மாநாட்டில் சந்தித்து பேசினேன்.
தற்போது அவர் எனது நாட்டுக்கு (இலங்கைக்கு) வந்து இருக்கிறார். எனவே அவரை நாளை (14–ந்தேதி) நான் நிச்சயம் சந்திப்பேன்.
மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply