இலங்கையில் பல்வேறு தலைவர்களை சந்திக்கவுள்ள மோடி
இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசியல் தலைவர்கள் உயர்மட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். அதனையடுத்து மாலை 3.15 மணிக்கு பிரதமரின் நரேந்திர மோடி இலங்கை பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றுவார். இது மிக முக்கியமான நிகழ்வு என்று குறிப்பிட முடியும். ஆனால் இந்தியப் பிரதமரின் இலங்கை பாராளுமன்ற உரையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். இதற்காக பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை விசேடமாக கூடவுள்ளது. அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்பகளும் குறித்த விசேட அமர்வுக்கு வருகைதருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
எம்.பி.க்களுடன் சந்திப்பு
பாராளுமன்ற உரைக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் மோடி, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் குறுகிய நேர சந்திப்பினை மேற்கொள்வார். பாராளுமன்றத்தில் இந்தியப் பிரதமருக்கு தேநீர் விருந்துபசாரம் அளிக்கப்படவுள்ளது.
அதன்பின்னர் இந்திய அமைதிப்படை நினைவிடத்துக்குச் செல்வார்.அங்கு அவர் உயிர்நீத்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்துவார்.
வர்த்தக சம்மேளன சந்திப்பு
இன்று மாலை இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்வார். கடந்த சில வருடங்களாக இந்தியாவினதும் இலங்கையினதும் வர்த்தக உறவு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. வர்த்தக மாநாட்டில் இந்தியப் பிரதமர் உரையாற்றுவார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் எவ்வாறு வர்த்தக பொருளாதார முதலீட்டு உதவிகளை மேம்படுத்துவது என்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெறும்.
கூட்டமைப்பு சந்திப்பு
வர்த்தக சந்திப்பையடுத்து அரசியல் கட்சிகளுடனான சந்திப்பு நடைபெறும். அந்த சந்திப்புகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு மிக முக்கியமானதாகும். அதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பல்வேறு விடயங்களை இந்திய பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவரவுள்ளனர். காணி விவகாரம் அரசியல் தீர்வு விடயம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை காணாமல்போனோர் பிரச்சினை மற்றும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் என்பன குறித்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்திய பிரதமருக்கு எடுத்துரைப்பார்.
நிமல் சிறிபாலவுடன் சந்திப்பு
கூட்டமைப்பினருடனான சந்திப்பையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறி பால டி சில்வாவை இந்தியப்பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். இதன்போது அரசியல் ரீதியான பல விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது. குறிப்பாக புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு எதிர்க்கட்சி ஆதரவு வழங்குவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி. சில்வா இந்தியப் பிரதமருக்கு விளக்கமளிப்பார்.
சந்திரிகாவுடன் சந்திப்பு
அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் கொழும்பில் இந்திய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார். இதன்போது பல விடயங்கள் குறித்து பேச்சு நடத்தப்படும். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பாரா இல்லையா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை்.
இன்றைய தினத்தில் இறுதி நிகழ்வாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரவு விருந்துபசாரம் நடைபெறும். அதில் பிரதமர் மோடி கலந்துகொள்வார். அத்துடன் முதல்நாள் நிகழ்வுகள் முடிவடையும்.
அநுராதபுரம்
இரண்டாம் நாள் சனிக்கிழமை தினத்தன்று நிகழ்வுகள் முழுமையாக கொழும்புக்கு வெளியில் நடைபெறும். முதலாவதாக மோடி அநுராதபுரத்துக்கு விஜயம் செய்வார். அங்கு சிறிமஹா போதியில் வழிபாடுகளை மேற்கொள்வார். மஹிந்த மற்றும் சங்கமித்தை ஆகியோர் வருகை தந்த புனித இடமாக அநுராதபுரம் காணப்படுகின்றது.
தலைமன்னார் விஜயம்
அதன் பின்னர் இந்தியப் பிரதமர் மோடி தலைமன்னாருக்கு விஜயம் செய்வார். தலைமன்னார் என்பது வரலாற்று ரீதியாகவே இந்தியாவுடன் தொடர்புபட்ட மிக அருகில் உள்ள பிரதேசமாகும். இந்தியப் பிரதமர் மோடி தலைமன்னார் ரயில் நிலையத்தை திறந்து வைப்பார். தலைமன்னார் மடுரோட் ரயில் சேவையையும் இந்தியப் பிரதமர் திறந்து வைப்பார். இந்த ரயில் பாதையை இந்திய நிறுவனம் நிர்மாணித்தமை விசேட அம்சமாகும்.
யாழ்.விஜயம்
அந்த நிகழ்வுகளின் பின்னர் தலைமன்னாரிலிருந்து இந்தியப் பிரதமர் மோடி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வார். யாழ்ப்பாணத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் உள்ளன. முதலாவதாக யாழ்ப்பாண கலாசார நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இந்திய பிரதமரினால் நாட்டப்படும்.
ஆளுநர் சந்திப்பு
அதன் பின்னர் வடக்கு ஆளுநரினால் வழங்கப்படும் பகலுணவு விருந்துபசாரத்தில் கலந்துகொள்வார். யாழ்ப்பாணத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சில வீடு களை பயனாளிகளுக்கு இந்திய பிரதமர் கையளிப்பார். இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்த வீடுகள் கையளிக்கப்படும். இதுவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.
மு.கா. சந்திப்பு
கொழும்பில் அவர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் பி்ரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்துவார்.
இ.தொ.கா. சந்திப்பு
அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் இந்திய வம்சாவளி தலைவர்கள் உள்ளிட்ட பலரை அவர் சந்தித்து பேச்சு நடத்துவார். அதன் பின்னர் சனிக்கிழமை இரவு இலங்கைக்கான இந்திய தூதுவரின் இரவு விருந்துபசாரத்தில் அவர் பங்கேற்பார். அதன் பின்னர் இந்தியப் பிரதமர் புதுடில்லி நோக்கி பயணிப்பார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply