தேர்தல் முறையில் மாற்றம் வரினும் ‘பிக்பொக்கட்’ அடிக்க இடமளியோம் எதிர்க்கட்சித் தலைவர் : நிமல்
புதிய தேர்தல் முறைக்கு ஆதரவு வழங்குகின்றபோதும், இதனைப் பயன்படுத்தி அரசியல் ‘பிக்பொக்கட்’ அடிப்பதற்கு எவரையும் அனுமதிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சாதகமான புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு விருப்பம் இல்லையெனத் தோன்றுகின்றது.
அவ்வாறானதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதாயின் முதலில் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார். ஆரோக்கியமான அரசியல் கலாசாரமொன்றை தோற்றுவிப்பது தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய பவ்ரல் அமைப்பின் ‘மார்ச் 12 கொள்கைத்திட்டம்’ நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், புதிய அரசியல் கலாசாரமொன்றை ஏற்படுத்துவதற்காக பவ்ரல் அமைப்பு காலத்துக்குத் தேவையான கொள்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இதில் குறிப்பிடப்பட்டது போன்று சாதகமான புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதாயின் அரசியல் மறுசீரமைப்பு மற்றும் தேர்தல்முறை மாற்றம் ஏற்படுவது அவசியமானது. ஜே.ஆர்.
ஜயவர்த்தன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையும், விருப்பு வாக்கு முறையையும் ஏற்படுத்தி நாட்டின் தேர்தல் முறையை அழிவுக்குக் கொண்டுசென்றுவிட்டார். நிறைவேற்று அதிகாரமுறையால் பயங்கரவாதத்தை அழித்தமை போன்ற நல்ல விடயங்களையும் மேற்கொள்ள முடிந்துள்ளது. இருந்தபோதும் சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் நிறைவேற்று ஜனாதிபதி முறையால் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் தேர்தல் முறைமாற்றப்பட வேண்டும். நிறைவேற்று அதிகார முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அரசியல் வாதிகளை குடுக்காரர்கள், எதனோல் காரர்கள், வர்த்தகர்கள் என கதைக்கின்றோம். இவ்வாறான நிலைப்பாட்டை மாற்றுவதற்கு சாதகமான அரசியல் கலாசாரமொன்றை கொண்டுவருவது அவசியம்.
இக் கலாசாரத்தை கொண்டுவருவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரும்ப வில்லையென்றே தோன்றுகின்றது. தேர்தல் முறைமாற்றமொன்றை உடனடியாகக் கொண்டுவரும் நோக்கத்தைக் காணவில்லை. அடுத்த பாராளுமன்றத்தில் இதனைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது. குறுகிய அரசியல் இலாபத்துக்காக இதனைப் பயன்படுத்த எவருக்கும் அனுமதிக்க முடியாது. தேர்தல் முறை மாற்றத்தைத் தடுத்து அரசியல் குண்டு போடவேண்டாம்.
தேர்தல் முறை மாற்றத்துக்கு கைவிலங்கிட்டுத் தடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். சாதகமான அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தும் விடயத்தில் அரசசார்பற்ற நிறுவனங்கள் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும். அரசியலமைப்பு மாற்றத்துக்கான அடிப்படை இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கு நாம் ஆதரவு வழங்கத் தயாராகவும் உள்ளோம். இருந்தபோதும் இதனைப் பயன்படுத்தி ‘அரசியல் பிக்பொக்கட்’ அடிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply