எஞ்சிய ஆயுதங்கள் வேறு முகாம்களுக்கு மாற்றம்
கொஸ்கம சாலாவ முகாமிலிருந்த ஆயுதங்கள் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இங்கு 10 வீதமான ஆயுதங்களே எஞ்சியிருந்ததாக மேல் மாகாணத்துக்கான இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். யுத்த காலத்தில் கப்பல்கள் மூலம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கு கொஸ்கம முகாமே மிகவும் பொருத்தமாக இருந்தது. இங்கிருந்து ஏனைய பகுதிகளுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டன. யுத்தம் முடிந்த பின்னரும் அங்கிருந்து ஆயுதங்கள் ஏனைய பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வந்தன. 10 வீதமான ஆயுதங்களே இங்கு எஞ்சியிருந்தன. இன்னும் ஆறுமாதகாலம் சென்றிருந்தால் இவை கூட வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கும் என அவர் கூறினார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேஜர் ஜெனரல் இதனைத் தெரிவித்தார். இந்த முகாமில் அமைக்கப்பட்டிருந்த ஆயுதக் களஞ்சியம் சகல தொழில்நுட்பத்துடனும், தரத்துடனுமே அமைக்கப்பட்டிருந்தது. இவ்விபத்துக்கான காரணம் என்ன என்பதை உடனடியாகக் கூற முடியாது. இது தொடர்பில் இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுக்கவிருப்பதுடன், தேசிய மட்டத்திலான விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். விசாரணைகளின் முடிவிலேயே காரணத்தைக் கூறக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இவ்விபத்தில் சேதமடைந்த வீடுகளை மீளக்கட்டிக்கொடுக்கும் பொறுப்பை இராணுவத்தினர் ஏற்றுள்ளனர். இதனை அனுபவமாகக் கொண்டு ஏனைய பகுதிகளில் உள்ள ஆயுதக் களஞ்சியங்களையும் ஆய்வுசெய்வதற்கு இராணுவத்தளபதி விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். இராணுவ முகாம்கள் மாத்திரமன்றி கடற்படை மற்றும் விமானப்படை முகாம்களில் உள்ள ஆயுதக் களஞ்சியங்களும் ஆய்வுசெய்யப்படவிருப்பதாக மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க சுட்டிக் காட்டினார்.
விபத்து இடம்பெற்ற இராணுவ முகாமுக்குள் வேறு எந்த உயிரிழப்புக்களும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும், முகாமிலிருந்த பிரதான கட்டடம் முற்றாக சேதமடைந்திருப்பதாகவும் தெரிவித்தார். வெடிவிபத்தில் வெடித்துச்சிதறிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களின் பாகங்களை இராணுவத்தினர் சேகரித்து வருவதுடன், சுற்றயல் பகுதியில் உள்ள மக்களின் வீடுகள் மற்றும் காணிகளைச் சுத்தப்படுத்தும் பணிகளையும் இராணுவத்தினர் ஆரம்பித்திருப்பதாகக் கூறினார். மூடப்பட்டிருக்கும் வீதிகளை முடிந்தளவு விரைவில் திறப்பதற்கும் அவற்றை சீர்செய்வதற்கும் எதிர்பார்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், விபத்து ஏற்பட்ட உடன் தமக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட்ட சகல மக்களுக்கும், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு உதவிய சகலருக்கும் இராணுவத்தினர் சார்பில் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply