தமிழ் தெரிந்த நீதிபதிகளை கொண்டு விசேட நீதிமன்ற அமர்வுகள் நடத்த திட்டம்: மனோ கணேசன்
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தேசிய மொழிக் கொள்கையொன்றை தயாரிக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக சகவாழ்வு, தேசிய மொழிகள் மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பல தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தப்படாதிருந்த தேசிய மொழிக் கொள்கையை எட்டு மாதங்களுக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும், நிலைமையை மாற்றுவதற்கான சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
23/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறினார். அரசாங்க சேவைக்கு உள்வாங்கும்போது இரு ஆட்சி மொழிகளையும் தெரிந்தவர்களை தெரிவு செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவிருப்பதுடன், தமிழ் மாத்திரம் தெரிந்த குற்றவாளிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதை தடுப்பதற்கு தமிழ் தெரிந்த நீதிபதிகளைக் கொண்ட விசேட அமர்வுகளை நடத்துவது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரமொன்றும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 13 திருத்தம், 16ஆவது திருத்தங்கள் ஊடாக இரு மொழிக் கொள்கை கொண்டுவரப்பட்டபோதும் பல தசாப்தங்களாக இது சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தேசிய மொழிக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையில் நடைமுறையாகாமை குறித்து மனம் வருந்துகிறேன். தான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றபோது தமிழ் மொழிக்கு சமமான அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், இந்த நிலைமையை மாற்றுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இரு மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட 41 பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளன. இருந்தாலும் இங்கு போதுமான தமிழ் பேசும் அதிகாரிகள் இல்லை. இது தொடர்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றுநிருபங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
அரச பணிக்கு வந்த பின்னர்தான் இரண்டாவது ஆட்சிமொழியை கற்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதனை மாற்றி அரசாங்க சேவையில் இணைவதற்கு முன்னரே இரண்டு மொழிகளும் கற்க வேண்டும் என்ற கட்டாயம் கொண்டுவரப்பட வேண்டும். சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இதனைக் கடைப்பிடிக்காவிட்டாலும், இரு மொழி பிரதேச செயலகப் பிரிவுகளில் இதனைக் கட்டாயப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.
நீதி மன்றங்களில் தமிழ் தெரியாத நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஏற்படும் அநீதியை தவிர்ப்பதை கவனத்தில் கொண்டு தமிழ் தெரிந்த நீதிபதிகள் குழுவொன்றும் அமைக்க எதிர்பார்த்துள்ளோம். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை விரைவில் சமர்ப்பிக்கப்பும் என்றார்.
வடக்கு, கிழக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் முறைப்பாடு செய்ய முடியாத நிலை உள்ளது. இதற்காக தமிழ் இளைஞர்களை பொலிஸில் இணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவ்வாறான பகுதிகளில் மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் உரைபெயர்ப்பாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா
முன்னதாக தனது கேள்வியை முன்வைத்த டக்ளஸ் தேவானந்தா கூறுகையில், சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக இருக்கின்ற போதும் அது சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலான அமைச்சுக்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கூட சிங்கள மொழியிலேயே பதில்களை அனுப்பி வைக்கின்றன. இதனால் பல சிரமங்களுக்கு மக்கள் முகங்கொடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply