7பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு மீளாய்வு மனு தாக்கல்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மீளாய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேர் 25 ஆண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு மத்திய அரசு அனுமதி தர மறுத்ததுடன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கையும் தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்தது.
இதனிடையே, கடந்த மார்ச் 2ம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதற்கிணங்க “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து (18.02.2014) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து இந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய 4 பேரையும் சேர்த்து மொத்தம் 7 பேரை விடுதலை செய்வது என தமிழக அரசு முடிவெடுத்தது.
இந்த வழக்கின் புலன் விசாரணையை சி.பி.ஐ. மேற்கொண்டதால், மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தும் முன் மத்திய அரசுடன் கலந்தாலோசிப்பது அவசியம் எனத்தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மத்திய அரசின் கருத்தை அறிய 19.02.2014 அன்று தமிழக அரசு புதுடில்லிக்கு கடிதம் அனுப்பியது.
மத்திய அரசின் கருத்தை 3 தினங்களுக்குள் தெரிவிக்குமாறு அக்கடிதத்தில் கேட்கப்பட்டது. எனினும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பான தனது கருத்தை தெரிவிப்பதற்கு பதிலாக, தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு திடீரென மீளாய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், மத்திய அரசிடம் ஆலோசனை கேட்கலாமே தவிர, அனுமதி பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply