ரியோ போட்டிகள் நிறைவு: 2020 ஒலிம்பிக் டோக்கியோவில்

olimpicரியோ ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி நாளான இன்று ஆண்கள் மாரத்தான் உள்பட எஞ்சிய போட்டிகள் நடைபெற்றன.

முன்னதாக, கூடைப்பந்து மகளிர் பிரிவு போட்டியில், அமெரிக்க மகளிர் அணி, தங்கப் பதக்கம் வென்றது. ஸ்பெயின் அணிக்கு எதிராக நடந்த இறுதி ஆட்டத்தில், தங்களின் அபார திறனால், 101-72 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்க அணி வென்றது.

ரியோ ஒலிம்பிக்ஸ் தங்கப் பதக்கத்தோடு, தொடர்ந்து ஆறாவது முறையாக அமெரிக்க மகளிர் கூடைப்பந்து அணி தங்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து விளையாட்டு போட்டியில், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை நடத்துகின்ற பிரேசில் அணி தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

நேற்றிரவு ஜெர்மனிக்கு எதிராக நடந்த இறுதி போட்டியில், சமநிலை ஏற்பட்டதால், பெனால்டி ஷூட்-அவுட் முறைப்படி முடிவு தீர்மானிக்கப்பட்டது. இதில் அதிக கோல் அடித்த பிரேசில் அணி பிரேசில் அணி தங்க பதக்கம் வென்றது.

பிரிட்டன் தடகள வீரர் மோ ஃபாராக் ஐந்தாயிரம் மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்று, தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் “இரு முறை இரட்டை தங்கம்“ வென்றவர் என்ற புகழை அடைந்துள்ளார்.

மகளிர் 800 மீட்டர் ஓட்டப்போட்டியில், தென்னாப்பிரிக்க வீராங்கனை காஸ்டர் செமன்யா தங்கப்பதக்கம் பெற்றார்.

ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், மல்யுத்தம் 65 கிலோ சுதந்திர பாணி (ஃ ப்ரி ஸ்டைல்) பிரிவின் முதல் சுற்று போட்டியில், இந்திய வீரர் யோகேஸ்வர் தத் தோல்வியடைந்துள்ளார்.

ஆண்கள் மல்யுத்தம் 65 கிலோ பிரிவில், இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் யோகேஸ்வர் தத், மங்கோலியாவின் கன்ஜோரிஜினை எதிர்கொண்டார்.

இந்த போட்டியின் ஆரம்பம் முதல் மங்கோலிய வீரரின் ஆதிக்கத்தை சமாளிக்க முடியாமல் தடுமாறிய யோகேஸ்வர் தத் , இறுதியில் 0-3 என்ற புள்ளிகளின் அடிப்படையில் தோல்வியைத் தழுவினார்.

கடந்த லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், யோகேஸ்வர் தத் வெண்கல பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளின், ஆண்கள் மாரத்தான் போட்டியில் கென்யாவின் எல்யூட் கிப்சோகி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, பதக்கப் பட்டியலில், அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply