சார்க் மாநாட்டிலிருந்து இந்தியா விலகியது

sargபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இவ்வாண்டு நவம்பரில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்க (சார்க்) மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லையென, இந்தியா அறிவித்துள்ளது. அதன் அறிவிப்பைத் தொடர்ந்து, அந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லையென பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பூட்டான் ஆகிய நாடுகளும் அறிவித்துள்ளன.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான உறவுகள், அண்மைக்காலமாகவே சிதைவடைந்து வந்த நிலையில், இந்தியாவின் காஷ்மிரிலுள்ள உறி பிரதேசத்திலுள்ள இராணுவ முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இந்த உறவு, மேலும் பாதிப்படைந்தது. ஐ.நா பொதுச்சபையிலும், இரு நாடுகளும் முரண்பட்டுக் கொண்டன.

இந்நிலையில், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு, “பிராந்தியத்தில் அதிகரித்துவருகின்ற எல்லைப் பகுதித் தாக்குதலும் உறுப்பு நாடுகளின் உள்விவகாரங்களில் ஒரு நாடானது தலையிட்டு வருகின்றமையும், 19ஆவது சார்க் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான சூழல் காணப்படவில்லை என்பதைக் காட்டுகின்றன. நிலவும் இச்சூழ்நிலையில், இஸ்லாமாபாத்தில் இடம்பெற முன்மொழியப்பட்டுள்ள மாநாட்டில், இந்திய அரசாங்கம் கலந்துகொள்ள முடியாமலுள்ளது” எனத் தெரிவித்தது.

இந்தியாவின் இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இந்த மாநாட்டில் தாங்களும் கலந்துகொள்ளப் போவதில்லையென, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பூட்டான் ஆகிய நாடுகளும் அறிவித்துள்ளன. தங்களது முடிவை, சார்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் நேபாளத்திடம், இந்நாடுகள் அறிவித்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இம்முறை இடம்பெறவுள்ள மாநாட்டில், இலங்கை, மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகள் மாத்திரமே கலந்துகொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

இதேவேளை, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் உருவாகியுள்ள பதற்ற நிலையைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் மூன்று நதிகளின் நீர்ப்பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை இல்லாது செய்ய வேண்டும் அல்லது அதை மீள ஆராய வேண்டுமென்ற கோரிக்கை, இந்தியாவில் எழுந்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமரின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான ஆலோசகரான சர்த்தாஜ் அஸிஸ், இந்தியாவிலிருந்து பாயும் 3 நதிகளிலிருந்தும் அதிக நீரை இந்தியா எடுப்பதற்கெதிராக எச்சரிக்கை விடுத்தார். அந்த ஒப்பந்தத்தை இல்லாது செய்வது தொடர்பாக யோசிப்பது கூட, மிகவும் பொறுப்பற்ற ஒன்று என, அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்துக்கு எதிரான உணர்வு, இந்தியாவில் அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும், இந்திய அரசாங்கத் தரப்பில், அவ்வாறான கருத்து, இன்னும் முன்வைக்கப்படவில்லை. மாறாக, திங்கட்கிழமையன்று கருத்துத் தெரிவித்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஒப்பந்தத்தை மீறாமல், அதிகபட்ச நீரை எடுக்க வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply