நான் அனைத்து கலைஞர்களையும் மதிப்பவன்’ பாகிஸ்தான் நடிகர்களுக்கான தடை குறித்து அமிதாப் பச்சன் கருத்து
நான் அனைத்து கலைஞர்களையும் மதிப்பவன்’ என்று பாகிஸ்தான் நடிகர்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து நடிகர் அமிதாப் பச்சன் கருத்து தெரிவித்தார். இந்தி நடிகர் அமிதாப் பச்சன் நேற்று தனது 74–வது பிறந்தநாளை மும்பையில் குடும்பத்துடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார். பின்னர், நிருபர்களை சந்தித்து அவர் பேட்டி அளித்தார். அப்போது, ‘‘உரி பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்தி திரையுலகினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்ததால், திரையுலகில் பிளவு ஏற்பட்டு விட்டதாக கருதுகிறீர்களா?’’ என்று நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளிக்க மறுத்த அமிதாப்பச்சன், ‘‘இதுபோன்ற கேள்விகளை முன்வைப்பதற்கு இது சரியான தருணம் என்று நான் கருதவில்லை. மேலும், இதுபோன்ற கேள்விகளை கேட்க வேண்டாம் என்று இருகரம் கூப்பி கேட்டு கொள்கிறேன்’’ என்றார்.
கலைஞர்களை மதிக்கிறேன்
தொடர்ந்து பேசிய அவர், ‘‘எல்லையில் நடைபெறும் நிகழ்வுகளால் நாட்டு மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள். நாம் பாதுகாப்பாக வாழ்வதற்கு உயிரை கூட தியாகம் செய்யும் வீரர்களுக்காக நாம் ஒற்றுமையை வெளிப்படுத்த இதுவே சரியான தருணம்’’ என்றார்.
மேலும், ஒரு நாட்டை (பாகிஸ்தான்) சேர்ந்த நடிகர்களுக்கு தடை விதிக்கலாமா? கூடாதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘நான் அனைத்து கலைஞர்களையும் மதிப்பவன்’’ என்று அமிதாப்பச்சன் பதில் அளித்தார்.
மோடி வாழ்த்து
நடிகர் அமிதாப்பச்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுபற்றி டுவிட்டரில், ‘உங்களது பன்முகத்திறமையும், பணிவும் தான் ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. உங்களது நீண்ட ஆயுளுக்காகவும், உடல்நலனுக்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
இதேபோல் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் மற்றும் வெங்கையா நாயுடு மற்றும் திரையுலகத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply