மெக்ஸிகோ பொருட்களுக்கு வரி விதித்து எல்லை சுவருக்கு நிதி திரட்ட டிரம்ப் திட்டம்

மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்து, அதிலிருந்து கிடைக்கின்ற வருவாயை அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்ட பயன்படுத்த அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்கான செலவை யார் ஏற்பது என்ற சர்ச்சைகளுக்கு மத்தியில், மெக்ஸிகோ அதிபர் வாஷிங்டன் பயணத்தை ரத்து செய்த பிறகு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதனை வெளியிட்ட பிறகு, இது பல மாற்று யோசனைகளில் ஒன்று என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ள எல்லையோர சுவரை கட்டுவதற்கு மெக்ஸிகோவின் இறக்குமதி பொருட்களுக்கு 20 சதவீத வரி விதித்திருப்பதை அந்நாடு கண்டித்திருக்கிறது,

இத்தகைய வரி விதிப்பு மெக்ஸிகோ பொருட்களின் விலை அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு அதிகமாகி, அமெரிக்கர்களே இந்த சுவருக்கான நிதியை செலுத்துவதாக அமைந்து விடும் என்று மெக்ஸிகோ வெளியுறவு அமைச்சர் லுயிஸ் விதேகாரே கூறியுள்ளார்.முன்னதாக, அமெரிக்காவின் தெற்கே மெக்ஸிகோ எல்லையில், சுவரை கட்டுகின்ற செயலாணையில் டிரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டார்.

இந்த சுவரை கட்டுவதற்கு குடியரசு கட்சியினர் கூறுகின்ற 12 முதல் 15 பில்லியன் டாலர்கள் செலவை மெக்ஸிகோவிடம் இருந்தே பெறுவோம் என்பது டிரம்பின் அதிபர் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது.

ஆனால், இதற்கான செலவை மெக்ஸிகோ ஏற்பது ஒருபோதும் நடக்காது என்று கூறி வந்த அந்நாட்டு அதிபர் என்ரிக் பெனா நியேடோ, அடுத்த வாரம் வெள்ளை மாளிகை செல்ல இருந்த பயணத்தை ரத்து செய்துள்ளார்.

சில மணிநேரங்களுக்கு பிறகு பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சியன் ஸ்பைஸர், சுவர் கட்ட நிதி திரட்டுவது பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அதிபர் டிரம்ப் கலந்துரையாடியிருக்கிறார் என்றும், அமெரிக்க காங்கிரஸ் திட்டமிடுகின்ற வரி சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருக்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார். 20 சதவீத வரி விதிப்பதால், ஆண்டுக்கு சுமார் 10 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கலாம் என்றும் அவர் கூறினார்.

ஏற்றுமதிக்கு வரி விதிப்பதும், இறக்குமதிகளை சுதந்திரமாக அனுமதிப்பதுமாக இருக்கின்ற தற்போதைய நாட்டின் கொள்கை கேலிக்குரியதாகும் என்று விமான படைதளம் ஒன்றிற்கு வெளியே வைத்து கூறிய ஸ்பைஸர், இந்த வரி விதிப்பு மூலம் சுவர் கட்டுவதற்கான தொகையை எளிதாக பெறலாம் என்று தெரிவிதார்.

ஆனால், மெக்ஸிகோவின் பொருட்களுக்கு வரி விதிப்பது கவனத்தில் கொள்ளப்படும் பல நடவடிக்கைகளில் ஒன்று என்று வெள்ளை மாளிகை ஊழியர்களின் தலைவர் ரெயின்ஸ் பிரியேபஸ் பின்னர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply