மும்பையில் இருந்து கவர்னர் இன்று சென்னை வருகை சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்
தமிழக சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக (முதல்–அமைச்சர்) அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கடந்த 5–ந் தேதி ஒருமனதாக தேர்வு செய்தனர். இதையடுத்து அவர் கடந்த 7–ந் தேதி முதல்–அமைச்சராக பதவி ஏற்பார் என்று தகவல் வெளியானது. அதன்படி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
இதற்கிடையே சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்துக்குள் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கூடாது என்று கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் வைத்தனர்.
குழப்பம்
இந்தநிலையில் கடந்த 5–ந் தேதி கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர்(பொறுப்பு) வித்யாசாகர் ராவ் சென்னை திரும்பாமல் அங்கிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
டெல்லியில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரின் மகன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் அங்கிருந்து தனது சொந்த மாநிலமான மும்பை புறப்பட்டு சென்றார்.
மும்பையில் இருந்து அவர் 7–ந் தேதி சென்னை புறப்பட்டு வருவார் என்றும், சசிகலா அவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கவர்னர் வித்யாசாகர் ராவ் வரவில்லை. இதனால் அன்றைய தினம் சசிகலா முதல்–அமைச்சராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் சசிகலா முதல்–அமைச்சராக பதவி ஏற்பது எப்போது? என்பதில் குழப்பம் நிலவியது.
இன்று சென்னை வருகை
மும்பையில் முகாமிட்ட கவர்னர் வித்யாசாகர் ராவ் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர உள்ளதால், அவரை முதல்–அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கலாமா? என்று சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்ததாகவும் தகவல் வெளியானது.
சசிகலாவும், அமைச்சர்களும், அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் கவர்னர் வித்யாசாகர் ராவின் வருகைக்காக காத்திருந்தவேளையில், அவர் மும்பையில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மதியம் புறப்பட்டு சென்னை வர உள்ளார்.
கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்ததும் சசிகலா கவர்னர் மாளிகைக்கு சென்று, அவரிடம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தான் சட்டமன்ற தலைவராக (முதல்–அமைச்சர்) தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தீர்மான நகலை வழங்கி, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவர்னரை இன்று அ.தி.மு.க. எம்.பி.க்களும் சந்திக்கிறார்கள்.
கவர்னர் முடிவு?
இந்தநிலையில் முதல்–அமைச்சர் பதவியில் இருந்து தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய சொன்னார்கள். மக்களும், தொண்டர்களும் விரும்பினால் ராஜினாமாவை திரும்ப பெறுவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பாக அறிவித்திருக்கிறார்.
எனவே தமிழ்நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு கவர்னர் வித்யாசாகர் ராவ் எந்த மாதிரியான முடிவை எடுக்கப்போகிறார்? என்பதை நாட்டு மக்கள் அனைவரும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply