அகதிகள் அமெரிக்காவில் நுழைய தடை: ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பற்றி கோர்ட்டு சரமாரி கேள்வி
7 நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் நுழைய ஜனாதிபதி டிரம்ப் தடை விதித்திருப்பது குறித்து கோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அண்மையில், அனைத்து நாடுகளையும் சேர்ந்த அகதிகளும் 120 நாட்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்து உத்தரவிட்டார். இதேபோல் ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மறு உத்தரவு வரும்வரை அடுத்த 90 நாட்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கும் அவர் தடை விதித்தார்.
ஜனாதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சியாட்டில் கோர்ட்டு நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட் தற்காலிக தடை விதித்தார். எனினும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள டிரம்ப் இதை எதிர்த்து கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள 9-வது அமெரிக்க மேல் முறையீட்டு கோர்ட்டில் டிரம்ப் அரசு முறையீடு செய்தது. இந்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது. தொலைபேசி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
அப்போது, அமெரிக்க அரசின் நீதித்துறை வக்கீல் ஆகஸ்ட் பிளென்ட்ஜி வாதிடுகையில், “அமெரிக்காவின் பாதுகாப்பு கருதியும், பிற நாடுகளில் இருந்து அதிக அளவில் மக்கள் குடியேறுவதை தடுக்கும் வழக்கமான நடைமுறையின்படியும்தான் ஜனாதிபதி டிரம்ப் இந்த தடையை விதித்தார். ஆனால் சியாட்டில் கோர்ட்டு அதை புரிந்து கொள்ளாமல் தடை விதித்து விட்டது. இது மிகுந்த ஆபத்தான விஷயம். எனவே இந்த தடையை சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டு நீக்கவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது நீதிபதிகளில் ஒருவரான மிச்சேல் பிரண்ட்லேண்ட், “தடை விதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நடந்த பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்பு கொண்டுள்ளனரா? என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
இன்னொரு நீதிபதி வில்லியன் கேன்பி, “ஜனாதிபதி மிக எளிதாக அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் நுழையக் கூடாது என்று கூறிவிட்டார். அவரால் அப்படி செய்ய இயலுமா?… அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா?” என்று சரமாரியாக கேள்விகளை கேட்டார்.
சியாட்டில் நகர கோர்ட்டின் இடைக்கால தடை தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்று வாஷிங்டன் மாகாண சொலிசிட்டர் ஜெனரல் நோவா பர்செல் வாதிட்டார். டிரம்ப்பின் சந்தேகத்துக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று அவர் கூறினார்.
அப்போது பிளென்ட்ஜி கூறுகையில், “அமெரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டை சேர்ந்த சில குழுக்கள் பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்பு கொண்டவை என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன” என்று குறிப்பிட்டார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் விரைவில் தீர்ப்பு கூறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு எப்படி வந்தாலும் இந்த பிரச்சினை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு வரை செல்லும் எனவும் கருதப்படுகிறது.
இந்த விசாரணை, அமெரிக்க தொலைக்காட்சிகள் பலவற்றில் நேரடியாகவும் ஒளிபரப்பானது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply