காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்க நாளை யாழ். வருகிறார் ஜனாதிபதி
யாழ்ப்பாணத்திற்கு நாளை வருகை தரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு நாளை மதியம் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்கள் கிளிநொச்சியில், ஏ-9 தேசிய நெடுஞ்சாலையை மறித்து மிகப் பெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை மே மாதம் 30 ஆம் திகதி முன்னெடுத்திருந்தனர். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமற்போனோரின் உறவினர்களை இரு வாரங்களுக்குள் சந்தித்துப் பேசுவதாகத் தெரிவித்திருந்தார். அதற்கு அமைவாக இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியின் பயணம் தொடர்பில், நேற்றுக் காலையே அலைபேசி ஊடாக, மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் மாவட்டச் செயலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு, மாவட்டத்தின் சிறப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறும். அரச தலைவர் மைத்திரிபால கலந்து கொள்வார். இந்தக் கூட்டத்துக்காக ஒழுங்குகள் இன்றைய தினமே, மாவட்டச் செயலக அலுவலர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசியபோது, சிறப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்துவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இதற்கு அமைவாகவே இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு நாளை மதியம் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிய வருகின்றது.வடக்கின் 5 மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டவர்கள் இந்தச் சந்திப்புக்கு அழைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply