ஒழுங்கு நடவடிக்கைகளை எடுப்பதில் சுதந்திரக் கட்சி அசமந்தம்: பேசல ஜயரத்ன

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு கட்சியின் ஒழுங்குகளை மீறும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானம் இதுவரை செயற்படுத்தப்படவில்லை என வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் பேசல ஜயரத்ன தெரிவித்துள்ளார்.இது குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாதுள்ளமை தொடர்பில் அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நான் வினா எழுப்பவுள்ளேன். கடந்த மேதினக் கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது கட்சியின் ஒழுக்கங்களை மீறுவோர் தொடர்பில் கட்சி யாப்பின் அடிப்படையில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக தெளிவான தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆனால், அது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுடன், மத்திய செயற்குழுவின் தீர்மானத்தை கட்சி நடைமுறைப்படுத்தாதுள்ளது. ஒழுக்கம் இல்லாது கட்சியொன்று முன்னோக்கிச் செல்ல முடியாது.

ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்படாமையினால் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமக்கு வேண்டியவாறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். கட்சியை பலவீனப்படுத்த, கட்சியை உடைக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு இது சந்தர்ப்பமாக அமைகின்றது.

அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டுவரப்படும்” என முதலமைச்சர் பேசல ஜயரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply