அரசியல் கைதிகள் என்று எவருமே இல்லை : யாழில் சுசில் பிரேமஜயந்த
நீதியமைச்சின் தகவலின் படி அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை. அனைவரும் குற்றமிழைத்தவர்களே. அவர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இத்தகை யவர்கள் தொடர்பான நடவடிக்கையானது நீதியின் ஊடாகவே முன்னெடுக்கப்பட முடியும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் அங்கு ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்பாக யாழ்ப்பாண மக்களின் மனதில் நல்ல மதிப்புள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்த துரையப்பா யாழ்ப்பாணத்தின் மேயராக இருந்தார். அவரது பெயரிலே துரையப்பா விளையாட்டரங்கு உள்ளது. இவ்வாறு மக்கள் மத்தியில் உள்ள நல்ல மதிப்பை நாங்கள் தொடர்ந்து பாதுகாப்போம் என்றார்.
இதன்போது அமைச்சரிடம் அரசியல் கைதிகள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பிய போது, யுத்த முடிவின் போது 12 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்த நிலையில் அவர்கள் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டிருந்தனர். தற்போது சிறையில் 100 பேர் வரையில் உள்ளார்கள். அவர்கள் அரசியல் கைதிகள் அல்ல.
கடந்த 85, 86, 87 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இது போன்ற ஒரு குழுவினர் இருந்தார்கள். அவர்களில் சிறு குற்றங்களை புரிந்தவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது. குற்றங்களை ஒப்புக்கொண்டவர்களுக்கு சிறு தண்டனை வழங்கப்பட்டிருந்தது. தற்போது அப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அது எதிர்வரும் ஆண்டு ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படும்.
குறிப்பாக நீதியமைச்சின் தகவலின் படி தற்போது அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை. இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகளே ஆவர் என்றார்.
இதேவேளை மீளக்குடியமர்வு தொடர்பாக வினவியபோது, யாழ்ப்பாணத்தில் அநேகமான இடங்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக வயாவிளானில் இருந்து பலாலி வரை விடுவிக்கப்பட்டுள்ளன. வயாவிளான் பாடசாலையும் விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பிடம் எந்தவொரு பாடசாலையும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply