அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க கமல்ஹாசன் திட்டம்
கிராமங்களை தத்து எடுத்து, அனைத்து வித வசதிகளையும் செய்து கொடுக்க நடிகர் கமல்ஹாசன் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வார இதழில் எழுதி வரும் கட்டுரையில் கூறி இருப்பதாவது:-
‘மக்களைக் களத்தில் சந்திக்க, வரும் பிப்ரவரி 21-ந்தேதி பயணம் கிளம்புகிறேன்’ என்று சொல்லியிருந்தேன். இந்தப் பயணத் திட்டத்துக்கு ஒரு பெயர் வைத்துள்ளோம். ‘நாளை நமதே’. ஆம், அந்தப் பயணத்திட்டத்துக்கு நாங்கள் வைத்துள்ள பெயர் இது தான்.
அவர் ஞாபகம் வந்தாலும் பரவாயில்லை, அவை நல்ல ஞாபகங்கள் என்பதால் இந்தப் பெயரை வைத்துள்ளோம்.
நான் ஏதோ சக்கரத்தைப் புதிதாக வடிவமைத்தவன் போல் பேசுவதாக நினைக்க வேண்டாம். ஏற்கெனவே அதைக் கண்டுபிடித்துச் சுழலவிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் போய்ப் பாடம் கற்றேன்.
லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்புகளுக்குச் சென்று அவர்களின் நற்பணிகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டு அதை அப்படியே நகலெடுத்து என் மன்றத்தின் நற்பணிகளாக மடைமாற்றினேன். ரத்த தானம், கண்தானங்கள் எல்லாம் அப்படித் தொடங்கியவைதாம்.
ஒரு கட்டத்தில் அந்த கிளப்புகளே வியந்து, ‘இங்கு வந்து செயல்படுத்துங்கள்’ என்று அழைக்கும் அளவுக்கு தானத்தில் உச்சம் தொட்டோம்.
அடுத்த கட்டமாக, ‘உங்கள் ஊரில் என்ன பிரச்சினைகள்’ என்று மக்களிடம் கேள்விகளை முன் வைத்தோம். ‘தெருவிளக்கு சரியாக எரியவில்லை’ என்பது தொடங்கி, ‘தெருவே இல்லை’ என்பது வரை விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. அப்படி வந்ததில் ஒன்று தான், ‘சாக்கடை அடைத்துக் கொள்வதால் அதைக் கடந்து பிள்ளைகளால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. அதைச் சரிசெய்து தரமுடியுமா’ என்ற ஒரு வேண்டுகோள்.
நேரில் போய்ப் பார்த்துவிட்டு வந்த நற்பணிமன்ற நிர்வாகிகள், ‘இடுப்பளவு சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யணும்’ என்றும் ‘பிள்ளைகள் போக அதன் மீது பாலம் கட்டணும்’ என்றும் இருவேறு யோசனைகளை முன் வைத்தனர். ‘பாலம் கட்டுகிறோம் என்று அணில் விளையாட்டு விளையாட முடியாது. அணிலும் வராது. மனிதர்கள் நாம்தான் செய்ய வேண்டும்’ என்றேன். அடுத்தடுத்த நாள்களில் வந்த சம்பந்தப்பட்ட நற்பணி மன்ற மாவட்ட நிர்வாகி ஒரு போட்டோவைக் காட்டி, ‘அந்தச் சாக்கடையைச் சுத்தம் செய்துவிட்டோம்’ என்றார்.
இடுப்பளவு சாக்கடையில் வரிசையாக கழிவுகளை ஏந்திய பக்கெட்டுகளுடன் நின்ற நற்பணிக் காட்சியைப் பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன.
நண்பர்களின் இத்தகைய நற்பணி என்னை அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் சென்றன.
ஏழை வள்ளல்களால் கட்டமைக்கப்பட்டதுதான் என் நற்பணி இயக்கம். இப்படி அடுக்கடுக்கான தேவைகளும், எங்களுக்கான கனவுகளும் நிறைய உண்டு. அதை நோக்கிய பயணத்தில் அங்கும் இங்குமாக நின்று நிறைய செய்து கொண்டிருந்ததை இப்போது நடுவில் மையத்தில் நின்று செய்யப் போகிறோம்.
ஆமாம், நாங்கள் என்ன செய்ய விழைகிறோம் என்பதற்கு முன்னுதாரணமாக, எங்கள் பானையில் எவ்வகைச் சோறு இருக்கிறது என்பதைப் பதம் பார்ப்பதற்கு ஏதுவாக முதல்கட்டமாகச் சில கிராமங்களைத் தத்தெடுக்கவிருக்கிறோம். ஒரு சோறு பதம்போல இது, நாங்கள் செய்து காட்டும் எங்களுடைய செயல்திறனுக்கான அடையாளத்திட்டம்.
இது என் நம்பிக்கை மட்டுமன்று, எங்களுள் விதைக்கப்பட்ட நம்பிக்கை. இந்தியாவின் பலம் கிராமங்களில்தான் இருக்கிறது என்று காந்தியார் விதைத்தது. நகரத்தை நோக்கிப் புலம் பெயர்பவர்கள் எல்லாம் தேவைக்காகத்தான் நகர்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, அந்தத் தேவைகள் அவர்களைச் சென்றடையும் பட்சத்தில், அவர்கள் நகரம் நோக்கி நகரமாட்டார்கள். அப்படிப்பட்ட முன்மாதிரி கிராமங்களை நிஜமாகவே உருவாக்கிக் காட்டுவதற்கான முனைப்புதான் இது.
ஆனால், ‘மாவட்டத்துக்கு ஒன்று, மாநகராட்சிக்கு ஒன்று’ என்று ஏகப்பட்ட கிராமங்களைத் தேர்ந்தெடுத்து அகலக்கால் வைக்கப்போவது இல்லை. முதலில் ஒரே ஒரு கிராமம். அதற்காக நாங்கள் போடும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.
விரைவில் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்துக்குப் பயணமாகும் நான், அங்கு பேசப்போவதும் இதைப் பற்றித்தான். ஆம், நான் போவதே, திறமைகளைச் சேர்க்கத்தான். அவர்களை என் தமிழகக் கிராமங்களை நோக்கி அழைக்கப் போகிறேன்.
எத்தனை பேர் வருவார்கள் என்று தெரியாது. ஆனால், அந்த உதவி நமக்கு அதி அவசியம். நிச்சயம் ஆர்வத்துடன் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இது நாட்டுக்குச் செய்யும் மரியாதை. ஏனெனில், கிராமங்களில்தான் நம் பலமிருக்கிறது. நகரங்களில் புற்றீசல் போல் எல்லோரும் ஓரிடத்தில் அடைந்து கொண்டு க்யூ கட்டுவது மட்டுமே மிச்சமிருக்கிறது.
சரி, கிராமத்தானுக்கு என்ன வேண்டும்? ‘ஏழு கடல் கடந்து வண்டுக்குள் இருக்கும் அரக்கனின் உயிர்’ என்று சொல்லும் பழங்கதைபோல் காடு, மலை கடந்து ஏழுமலை தாண்டிப் போய்க் கற்கும் ஒரு பொருள்தான் கல்வி என்ற நிலைமாறி நவீனக் கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பல லட்சம் ரூபாய் செலவு செய்து அமெரிக்கன் பள்ளியிலும், பிரிட்டீஷ் கல்விக் கூடங்களிலும் சேர்க்கிறார்களே அந்தக் கல்வியை நம் கிராமங்களுக்குள் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.
இதற்கான முன் விதைகளை காமராஜர் போன்றோர் விதைத்துவிட்டார்கள். அவ்வளவு ஏன் ஜஸ்டீஸ் பார்ட்டி காலத்திலேயே அந்த விதை விதைக்கப்பட்டுவிட்டது. அதை அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. நான் மூத்தோர்களைப் பார்த்து வியந்தும் நிற்க முடியாது, வரப் போகும் இளைஞர்களைப் பார்த்து இகழவும் முடியாது. அவர்களின் அறிவையும் இவர்களின் பலத்தையும் சேர்த்து கிராமத்துக்குள் பாய்ச்ச வேண்டும்.
அடுத்து நல்ல குடிநீர் வேண்டும், சுற்றம் சுத்தம், சுகாதாரம் வேண்டும், கலை நயம் கொண்ட பொழுது போக்கு வேண்டும், வெளியே போய் ஊர் திரும்ப நல்ல போக்குவரத்து வசதி வேண்டும், நீர்நிலை ஆதாரங்களை மேம்படுத்த வேண்டும். இப்படி அரசாங்கம் செய்யத் தவறியதை நாங்கள் செய்யப் போகிறோம்.
ஆம், ‘முற்றும் கோணல்’ என்று சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமே இல்லை. ஆடிக்காட்டு என்றால் ஆடிக்காட்ட வேண்டும். இப்போது நாங்கள் ஆடிக்காட்டப் போகிறோம். முதலில் ஒரு கிராமம். அதை மேம்படுத்துவதன் மூலம் கிடைக்கும் அனுபவப் பாடத்தைக் கொண்டு அடுத்தடுத்த கிராமங்களில் பணி முடிக்கப் போகிறோம்.
இந்த ‘நாளை நமதே’வுக்கான முதல் கிராமத்தேடலுக்காகச் சென்ற நம் குழுவினர், ‘‘ஒவ்வொரு கிராமமுமே அந்த முதல் கிராமத்துக்கான ‘லட்சணங்களுடன்’ இருக்கின்றன’’ என்ற அதிர்ச்சியை சொன்னார்கள்.
முக்கியமாக, தமிழாசிரியர்கள் இல்லை என்றார்கள். மொழிப்பாடம் கற்றுத்தரத் தமிழாசிரியர்கள் இல்லாமல் எதிர்காலத் தமிழகத்தை எப்படிக் கட்டமைக்கப் போகிறோம் என்ற கவலை எனக்கு.
மடிக்கணினியையும் கைப் பேசியையும் சாப்பிட முடியாது. ஆனால், அவை தாம் பலருக்கும் போய்ச் சேர்ந்திருக்கின்றன. மடிக் கணினி கொடுத்துவிட்டதாலேயே அறிவு வந்துவிடும் என்பதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்.
அதை இயக்குவதற்கே தனி அறிவு வேண்டுமே. அது ஒரு கருவிதானே. மீன் இருக்கும் இடம் வேறு, தூண்டில் இருக்கும் இடம் வேறு எனும் போது அதைக் கொண்டு போய்ப் போட்டு எப்படி மீன் பிடிக்க வேண்டும் என்பதைக் கற்றுத் தந்தால்தானே அவன் சுயமரியாதையுடன் சுயமாக வாழ்க்கை நடத்த முடியும்.
டுவிட்டரில் போட்டு பார்த்துவிட்டேன். ட்வீட் மழையே பொழிந்து விட்டேன். ஆனால் பெய்வது, தோல் கனத்தில் அவர்களுக்கு உறைக்கவே இல்லை. அப்படியிருக்க நான் மழை பொழிந்து என்ன பயன்? அதனால்தான் களம் காணத் தயாராகிவிட்டேன். அதற்கான முயற்சிதான் இந்த ‘நாளை நமதே.’
ஆம், நாளை நிச்சயம் நமதே. களத்தில் சந்திப்போம், கரம் கோர்ப்போம், தமிழகம் காப்போம்.
இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply